

நாகூர் நாகநாதர் சுவாமி கோயிலில் சசிகலா, ராகு பரிகார தோஷ நிவர்த்தி பூஜை செய்தார்.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலுக்கு சசிகலா இன்று (மார்ச் 27) மதியம் 3.55 மணிக்குத் தன் உறவினர்களுடன் வந்தார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பின்னர், நாகநாதர் சுவாமி கோயிலில் உள்ள ராகு - கேது சன்னதியில் நடந்த ராகு பரிகார தோஷ நிவர்த்தி பூஜையில் சசிகலா கலந்துகொண்டார்.
கோயில் கோயிலாகச் செல்கிறீர்களே, இது ஆன்மிகப் பயணமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ''உலக மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோயில் கோயிலாகச் செல்கிறேன்'' என்றார். பின்னர், அவர் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அண்மையில் திருவிடைமருதூரில் உள்ள ராமலிங்க சுவாமிகள் கோயிலில் சசிகலா பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்தார். பின்னர், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று அவர் நாகூர் நாகநாதர் கோயிலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.