குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த்.
தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த்.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் குழந்தைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வாக்குச் சேகரிப்பதற்காக வேட்பாளர்கள், கட்சிகளின் தலைவர்கள் ஊருக்குள் வரும்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேலும், வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பெரும்பாலும் அப்பகுதிக் குழந்தைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். சில தொகுதிகளில் குழந்தைகளைப் பிரச்சார வாகனங்களில் ஏற்றிப் பேசவிட்டும் வாக்குச் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''தேர்தலில் கோஷமிடுதல், துண்டறிக்கை கொடுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுவது, பேரணியாகச் செல்வது, கொடி பிடிப்பது, தோரணம் கட்டுவது போன்றவற்றுக்கு, குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்துத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு எண்ணற்ற புகார்கள் வந்துள்ளன.

இது குழந்தைகளின் உரிமைகளை மீறுவதோடு, தர நிலையைக் குறைப்பதாகவும் உள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் பரிந்துரையாகும்.

இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனத் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் காணூங்கோ வழியாக அந்தந்த மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹுவிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளேன்'' என்று ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in