

இலங்கையில் சிக்கியுள்ள காரைக்கால் மீனவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நாகையைச் சேர்ந்த இருவர் ஆகியோருடன் மொத்தம் 14 பேர், கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, 14 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், காரைக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (மார்ச் 27) புதுச்சேரியில் கூறியதாவது:
"புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையிடம் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மூலம் இலங்கை அரசிடம் பேசியுள்ளோம். விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள 40 மீனவ கிராமங்கள் மேம்பாட்டுக்காக, ஒரு மீனவ கிராமத்துக்கு ஒரு அமைப்பாளர் (சாகர்மித்ரா) நியமிக்கப்பட்டு, அப்பகுதியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் 'வந்தே பாரத்' திட்டத்தில், கரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்த புலம்பெயர்ந்த மக்கள் 4.36 லட்சம் பேர் மத்திய அரசால் மீட்கப்பட்டனர். இதில், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியிருந்த 1,600 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 313 படகுகளும் மீட்கப்பட்டன.
தேர்தலுக்காக இத்திட்டங்களை மத்திய அரசு சொல்லிக் காட்டவில்லை. தொடர்ந்து, மீனவர்கள் நலனுக்கான தேவைகளைச் செய்து வருகிறது. எப்போதும் மீனவர்கள் மீது அக்கறையுடன் செயல்படுவதோடு, அவர்கள் வெளிநாடுகளில் சிறைபிடிக்கும்போது, சிறிது தாமதமானாலும், அவர்களை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் தொடர்ந்து மீட்டுள்ளோம்.
மீனவர்களுக்கான தனி அமைச்சகம் செயல்படுவதால், கடலரிப்புப் பகுதியில் தூண்டில் வளைவு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போன்ற மீனவர்களின் குறைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும். மீனவர்கள் தங்கள் குறைகளை நேரடியாக எங்கள் அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம்".
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பேட்டியின்போது மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும் இருந்தார்.
இந்திதான் தெரியும்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால் மொழிபெயர்க்க தமிழ் தெரிந்தவரையும் அழைத்து வந்ததாகத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கை தொடங்கி புகார்கள் வரை எதற்கும் பதில் தர மறுத்த அவர், மீன்வளத்துறை கேள்விகளுக்கு மட்டுமே பதில் தந்தார்.