

அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்துத் துறைகளிலும், ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு 12 லட்ச ரூபாய் என முத்திரைத் தீர்வை துணை ஆட்சியர் நிர்ணயித்தார். அதை மறுமதிப்பீடு ஆய்வு செய்த பதிவுத்துறை தலைவர், ஒரு ஏக்கரின் விலை 51 லட்சம் ரூபாய் என மறுநிர்ணயம் செய்தார்.
நிலத்தின் மதிப்பை உயர்த்தி நிர்ணயித்த பதிவுத்துறை தலைவரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, நிலத்தை வாங்கிய ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அப்பகுதியில் ஒரு ஏக்கர் ரூ.25 முதல் 30 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. அதனை முறையாக ஆய்வு செய்யாமல் கடலூர் துணை ஆட்சியர் நிர்ணயித்தது தவறு என்பதால், பதிவுத்துறை தலைவருக்கான அதிகாரத்தின்படி, அவர் தாமாக முன்வந்து ஆய்வு செய்து ரூ.51 லட்சம் நிர்ணயித்ததில் தவறில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசு விளக்கத்தை ஏற்ற நீதிபதி, கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டதாக ரவி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவரது உத்தரவில், அருகில் உள்ள நிலத்தின் மதிப்பை விடக் குறைவாக நிர்ணயித்து, அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அரசின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவை சாதாரண மக்களையும், பயனாளிகளையும் சென்றடைகிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களின் சொத்துகளைச் சரிபார்க்கவும் உரிய நடைமுறை இல்லை எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி சுப்ரமணியம், தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டதுடன், அரசு ஊழியர்களின் சொத்துகள், பணித்திறன், நேர்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
பதிவுத்துறையில்தான் தினந்தோறும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதால், அனைத்துப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, அந்தப் பிரிவுகள் அளிக்கும் அறிக்கையை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி, மின்னஞ்சல் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.