Last Updated : 27 Mar, 2021 05:22 PM

 

Published : 27 Mar 2021 05:22 PM
Last Updated : 27 Mar 2021 05:22 PM

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 74 பேர் கோடீஸ்வரர்கள்: அதிக சொத்துள்ள 3 வேட்பாளர்கள் விவரம்

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 74 பேர் கோடீஸ்வரர்கள். இதன் எண்ணிக்கை கடந்த முறையை விடக் குறைந்துள்ளது. அதிக சொத்துள்ள 3 வேட்பாளர்களில் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் முதலிடமும், 2-வது இடத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், 3-ம் இடத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவரும் இடம் பிடித்துள்ளனர்.

புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகத்தின் சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களைக் கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. களத்தில் உள்ள 324 வேட்பாளர்களில் ( முழு ஆவணமில்லாத சுயேச்சை வேட்பாளர் ஒருவரைத் தவிர்த்து) 323 வேட்பாளர்களை ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் குறிப்பிட்டார்.

இதில் 323 வேட்பாளர்களின் பொருளாதாரப் பின்னணி சுவாரஸ்யமாக உள்ளது. அதன் விவரம்:

புதுச்சேரியில் ஆய்வு செய்யப்பட்ட 323 வேட்பாளர்களில் 74 பேர் (23 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்கள். 2016இல் 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தனர். அப்போதைய சதவீதம் 28. ஒப்பிடுகையில் கடந்த முறையை விட கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பாஜகவில் 9 வேட்பாளர்களில் 8 பேரும் (89 சதவீதம்), காங்கிரஸில் 14 வேட்பாளர்களில் 12 பேரும் (86 சதவீதம்), என்.ஆர்.காங்கிரஸில் 16 வேட்பாளர்களில் 13 பேரும் (81 சதவீதம்), அதிமுகவில் 5 வேட்பாளர்களில் நால்வரும் (80 சதவீதம்), திமுகவில் 13 வேட்பாளர்களில் 9 பேரும் (69 சதவீதம்) கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.

புதுச்சேரி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.14 கோடி. இது 2016இல் ரூ. 2.49 கோடியாக இருந்தது.

கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு விவரம்:

என்.ஆர்.காங்கிரஸில் 16 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.79 கோடி. பாஜக வேட்பாளர்கள் 9 பேரின் சொத்து மதிப்பு ரூ.9.89 கோடி. அதிமுக வேட்பாளர்கள் ஐவரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.9.1 கோடி. திமுக வேட்பாளர்கள் 13 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.03 கோடி. காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.82 கோடி.

வேட்பாளர்களில் முப்பெரும் பணக்காரர்கள்

உருளையன்பேட்டையில் சுயேச்சை வேட்பாளரும், என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட நேருவின் சொத்து மதிப்பு ரூ.43 கோடியாக உள்ளதால் அவர் வேட்பாளரில் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.38 கோடி. காங்கிரஸ் மாநிலத் தலைவரும், காரைக்கால் வடக்கில் போட்டியிடும் ஏ.வி.சுப்பிரமணியன் 3வது இடத்தில் உள்ளார். அவரது சொதது மதிப்பு ரூ. 27 கோடி.

சொத்தே இல்லை என்று ஊசுடு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் அபிமன்னன் தெரிவித்துள்ளார்.

குறைவான சொத்து உள்ளோர்

காரைக்கால் வடக்கு தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் அருளானந்தம், காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நெப்போலியன், நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பரந்தாமன் ஆகியோர் தங்களிடம் ரூ.500 மட்டுமே உள்ளதாக சொத்து மதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக கடன் உள்ள வேட்பாளர்கள்

புதுச்சேரியில் போட்டியிடுவோரில் 178 வேட்பாளர்கள் தங்களுக்குக் கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதில் காமராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஷாஜகான் தனக்கு ரூ.20 கோடி கடன் உள்ளதாகக் குறிப்பிட்டு கடனில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உருளையன்பேட்டை சுயேச்சை வேட்பாளர் நேரு ரூ.14 கோடி கடன் உள்ளதாகக் குறிப்பிட்டு இரண்டாம் இடத்தில் உள்ளார். 3-ம் இடத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளரும் வில்லியனூரில் போட்டியிடும் சிவா தனக்கு ரூ.10 கோடி கடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

323 வேட்பாளர்களில் 25 பேர் தங்களின் பான் எண்ணைத் தெரிவிக்கவில்லை.

அதிக ஆண்டு வருவாய் உள்ளவர்கள்

திருநள்ளாற்றில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஆண்டு வருவாய் ரூ.1.9 கோடி எனக் குறிப்பிட்டு முதலிடத்திலும், வில்லியனூரில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாரன் ஆண்டு வருவாய் ரூ.1.11 கோடி எனக் குறிப்பிட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளனர். உருளையன்பேட்டை சுயேச்சை வேட்பாளர் நேரு ஆண்டு வருவாய் ரூ.76 லட்சமாக உள்ளது. அவர் 3-வது இடத்தில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x