

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கருப்புப் பணம் இருப்பதால் வருமான வரித்துறை பற்றிக் கவலைப்படுகிறார் என, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பாஜக சார்பில் இன்று (மார்ச் 26) சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாகச் செயல்படுகின்றனர். 2017-ல் முதல்வர் பழனிசாமி பதவி ஏற்றபோது, இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், வெற்றிகரமாக ஆட்சி செய்து 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியது வெற்றிக்கு வழிவகுக்கும்.
திமுக தேர்தல் அறிக்கையைவிட அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. யார் ஆட்சி செய்ய வேண்டும் எனத் தமிழக மக்களுக்குத் தெரியும்.
திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின் வெட்டு தொடரும். நாம் அவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த நிலை வேண்டுமா? அல்லது மின் வெட்டு வேண்டுமா?.
திமுக என்றால் ஊழல்
திமுக என்பது வாரிசு, ஊழல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து. அவர்கள் வாரிசு அரசியல் செய்கின்றனர். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாகும். அந்தக் கட்சியின் 50 சதவீதப் பங்குகள் கருணாநிதி குடும்பத்தினரிடமும், 50 சதவீதப் பங்குகள் எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் போன்ற தலைவர்களிடமும் உள்ளன. அவர்களது குறிக்கோள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும், அவர்கள் குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்பதுதான். மக்கள் நலனைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால், பாஜக, அதிமுக, பாமக மற்றும் தமாகாவுக்கு மக்கள் நலன்தான் முக்கியம்.
உண்மையான நண்பர் யார்?
தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக, பிரதமர் மோடி அரசாங்கம், ரூ.6.10 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 48 லட்சம் குடும்பங்களுக்குத் தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில், தமிழக மக்கள் அதிகம் பலனடைந்துள்ளனர். 42 லட்சம் விவசாயக் குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனர். தென்னிந்தியாவில், தமிழ்நாடு அதிக பலன்களைப் பெற்றுள்ளது. உங்களுடைய உண்மையான நண்பன் யார்? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அமைச்சர்கள் புறக்கணிக்கவில்லை
தமிழக மக்கள் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பை விரும்பவில்லை. ஆனால், திமுகவினர் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பைச் செய்பவர்கள். பாஜகவினரை அதிமுக அமைச்சர்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் அவர்களை ஆதரிக்கின்றோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர்கள் வரவேற்கின்றனர்.
வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துகின்றனர். எ.வ.வேலுவிடம் கருப்புப் பணம் இருப்பதால், வருமான வரித்துறை சோதனையைப் பற்றிக் கவலைப்படுகிறார். அவரிடம் அதிக அளவில் கருப்புப் பணம் இருக்கலாம்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜக, எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை. எங்களுக்கு தேசமே முதன்மை. அடுத்துதான் கட்சி. அதன்பிறகுதான் தனி மனிதர்கள்.
தமிழ்க் கலாச்சாரம் என்றால் என்ன?
தமிழ்க் கடவுள் முருகனை இழிவுபடுத்தியபோது திமுக அமைதியாக இருந்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக நடத்திய வேல் யாத்திரை வெற்றி பெற்றதும், இப்போது இந்து கடவுளின் பக்தர்கள் என்பதுபோல் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டவர்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்தினர். இதுதான் தமிழ்க் கலாச்சாரமா?. விபூதி, குங்குமம் என்பது தமிழ்க் கலாச்சாரம். தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரி யார்? என மக்களுக்குத் தெரியும்".
இவ்வாறு சி.டி.ரவி பேசினார்.