

புதுச்சேரியில் பல தொகுதிகளில் வாக்காளர்களின் ரேஷன் கார்டுகளை பாஜகவினர் கேட்டு வருகின்றனர் என்று, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் கூறுகையில், "வாக்காளரின் ஆதார் எண்ணுடன் கூடிய மொபைல் எண் பெற்றது தொடர்பான விஷயத்தில் புதுச்சேரியில் 9 பாஜக வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தில் ரங்கசாமி கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரச் சண்டைதான் நடந்தது என்றார். அவர் ஆட்சிக் காலத்தில் துணைநிலை ஆளுநரோடு சண்டையிடவில்லையா? அவரும் அதே அதிகாரச் சண்டைதான் செய்தார். ஒரே மேடையில் காங்கிரஸ் ஆட்சியில் செய்த பணிகளை விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ரங்கசாமி தயாரா?
தேர்தலின்போது கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவருகிறது. இதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து பாஜகவினர் பலர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். பல தொகுதிகளில் வாக்காளர்களின் ரேஷன் கார்டுகளை பாஜகவினர் கேட்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளை (மார்ச் 28) புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ உட்பட பலர் பங்கேற்கின்றனர்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
பேட்டியின்போது வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.