

வாக்காளர்களின் ஆதார் விவரங்களைப் புதுச்சேரியில் பாஜகவுக்குக் கொடுத்தது யார் என்பது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மேலிடப் பார்வையாளருமான தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 27) கூறியதாவது:
"புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவினர் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலைச் சந்திக்கின்றனர். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சியைச் சீர்குலைத்ததுபோல, வாக்காளர்களையும் தங்களின் பண பலத்தால் வளைக்கத் திட்டமிடுகின்றனர். அமித் ஷா, நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங், அர்ஜூன்ராம் மேக்வால் என, மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் எங்கே இருந்தார்கள்? இவர்கள் யாரும் 5 ஆண்டுகளாக புதுவையின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளுநருக்குத்தான் அதிகாரம் என நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துள்ளனர். இதனையே புதுவையிலும் கடந்த 5 ஆண்டுகளாக அமல்படுத்தினர். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை காங்கிரஸ் மட்டுமின்றி திமுக, எதிர்க்கட்சிகளில் என்.ஆர்.காங்கிரஸும் வலியுறுத்தியது.
தற்போது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. மாநில அந்தஸ்துக்காக தேர்தலையே புறக்கணிக்கத் தயார் என ரங்கசாமி கூறியிருந்தார். தற்போது அந்தக் கூட்டணியில் எப்படி இடம் பெற்றுள்ளார்? பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறுவாரா?
வாக்காளர்களின் ஆதார் எண்ணுடன் கூடிய மொபைல் எண்களைப் பெற்று பாஜகவினர் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். ஆதார் அட்டையில் இருக்கும் தனி நபர் ரகசியங்களை எப்படி, யார் மூலம் பெற்றனர்? இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு நடந்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காகவும், தனி நபர் தகவல்களைத் திரட்டியதற்காகவும் தேர்தல் ஆணையம் உரிய விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையருக்குப் புகார் அளிக்கப்படும். இதுபற்றி, கலந்து ஆலோசித்து தேவை ஏற்பட்டால் சட்ட ரீதியாகவும் பணிகளைச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்".
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.