

என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் பாஜக கூட்டணியில் இருப்பதைக் கூட காட்டிக்கொள்வதில்லை என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
காரைக்காலில் இன்று (மார்ச் 27) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள வாக்காளர்களின் தொலைபேசி எண்களைப் பாஜகவினர் களவாடி வைத்துக்கொண்டு அதன் மூலம் பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் அனுமதிக்காமலேயே இதனைச் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களைத் தகுதி நீக்கமே செய்ய இயலும். எப்போதுமே குறுக்கு வழியில் சென்று ஆட்சிகளைக் கலைப்பது போன்ற செயல்பாடுகளைச் செய்து வரும் பாஜகவுக்கு இது புதிது அல்ல. தற்போது இவற்றையெல்லாம் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.
மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக பாஜக உள்ளது. எங்கு நின்றாலும் அவர்கள் தோல்வியைதான் சந்திப்பார்கள். எனவேதான் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் பிரச்சாரத்தின்போது பாஜக சின்னத்தையோ, பிரதமர் மோடி படத்தையோ பயன்படுத்துவது இல்லை. கூட்டணியில் இருப்பதாகக் கூடக் காண்பித்துக் கொள்வதில்லை. விருப்பமின்றி இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
பண பலம், பயமுறுத்தல், அரசு அதிகார அமைப்புகளின் மூலம் மிரட்டல் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படியில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். அதனால் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் வெற்றி பெறுவார்கள். அதுபோலப் புதுச்சேரியிலும் வெற்றி பெறுவார்கள்.
பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து குறித்துச் சொல்லாதது ஆச்சரியமான விஷயம் அல்ல. மாநில அந்தஸ்துடன் இருந்த காஷ்மீரையே இரண்டாக பிரித்தவர்கள், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது தவறு என்ற மனப்பான்மை உடையவர்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது குறித்து எப்படிப் பேசுவார்கள்?
காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து பிரச்சாரம் செய்தபோது, மத்திய அரசு அனுப்பிய நிதியை சோனியா காந்தி குடும்பத்துக்கு நாராயணசாமி அனுப்பிவிட்டார் என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதுபோலவே காரைக்காலுக்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கும் கூறியுள்ளார். இப்படி எவ்வளவு அவதூறுகளைப் பேசினாலும் மக்கள் ஏற்கப்போவதில்லை. காரைக்கால் தெற்கு தொகுதியில்தான் நான் 3 முறை வெற்றி பெற்றுள்ளேன். ஒரு முறை தோல்வியடைந்தேன். கடந்த 2 தேர்தல்களில் நான் போட்டியிடவில்லை.
தற்போது காரைக்கால் வடக்குத் தொகுதியில் பலமான ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளார் என்பதால் பலரும் போட்டியிட முன்வரவில்லை என்பதே உண்மை. அத்தொகுதியில் என்னைப் போட்டியிடுமாறு தலைமை வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டேன். ஆனால் களத்தில் இறங்கிய சில நாட்களிலேயே மக்கள் வரவேற்பு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். எனது முந்தைய செயல்பாடுகளை மக்கள் சிந்தித்துப் பார்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர். பிரதமர் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் திடீரெனப் பாஜகவில் இணைந்தது குறித்துச் செய்தியாளர்களிடம் கேட்டதற்கு, “எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும்போது வேட்பாளர்களை வாங்குவது பெரிய விஷயமில்லை” என்று ஏ.வி.சுப்பிரமணியன் கூறினார்.