வெட்டி ஒட்டப்பட்ட பேச்சு; நான் பொறுப்பேற்க முடியாது; முதல்வரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல: ஆ.ராசா விளக்கம்

வெட்டி ஒட்டப்பட்ட பேச்சு; நான் பொறுப்பேற்க முடியாது; முதல்வரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல: ஆ.ராசா விளக்கம்
Updated on
1 min read

ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இருவரின் அரசியல் ஆளுமையை ஒப்பிட்டுப் பேசும்போது நான் பேசிய சில வார்த்தைகளை ஒட்டி வெட்டி சமூக வலைதளங்களில் பரப்புவதாக அறிகிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல. முதல்வரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல என்று ஆ.ராசா தனது பேச்சுக்குத் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிட்டு ஆ.ராசா பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதல்வரின் பிறப்பு குறித்து அதில் ஒப்பீடு என்பதாகப் பேசியது பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் திமுக தலைவர்கள் தாக்கிப் பேசுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது பேச்சுக்குக் கண்டனம் வலுத்து வரும் வேளையில் ஆ.ராசா தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆ.ராசா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி:

“என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியும், இன்று அவர் பெற்றிருக்கிற இடத்தையும், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்த முறையையும், பெற்றிருக்கிற இடத்தையும் ஒப்பிட்டு நான் பேசிய சில வார்த்தைகளைக் கோர்த்து வெட்டியும், ஒட்டியும் சமூக வலைதளங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.

அது முற்றிலும் தவறானது. நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழையோ களங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டிய எண்ணமில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். ஸ்டாலின் முறையாக, படிப்படியாக வளர்ந்து தலைவராகியுள்ளார். குறுக்கு வழியில் நாங்கள் வரவில்லை என்று குறிப்பிட்டேன்.

எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதை ஒட்டியும், வெட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். அப்படிப்பட்ட உள்நோக்கத்துடன் எதையும் நான் குறிப்பிடவில்லை. இரண்டு பேரின் அரசியல் ஆளுமையைக் குறிப்பிட அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது.

அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in