

பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறையை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது எனவும் தன்னாட்சி அதிகாரமுள்ள துறையை தனக்கான அமைப்பாகப் பிரதமர் மோடி மாற்றி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 27) அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வருவது என்பது மத்திய அரசின் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும்தான் காட்டுகிறது.
தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஏற்றுவார்கள். ஏற்கெனவே ஏற்றி இருப்பதையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. தன்னாட்சி அதிகாரமுள்ள வருமான வரித் துறையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தனக்கான அமைப்பாக மாற்றி வருகிறார் பிரதமர் மோடி. பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கருவியாகவும் வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கருத்தைக் கூறியோ, ஆட்சியின் சிறப்புகளைக் கூறியோ, வாக்குறுதிகளை அளித்தோ வாக்குக் கேட்பதற்கு அதிமுக, பாஜக கூட்டணியினரிடம் ஒன்றும் இல்லாததால் இரவில் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடாவில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு சிறப்பாக உள்ளது'' என்று சீமான் தெரிவித்தார்.