மேகேதாட்டு அணை கட்டுவதைக் தடுக்கக் கோரி கர்நாடகாவில் முற்றுகைப் போராட்டம்: தஞ்சாவூரில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் 

தஞ்சாவூரில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்த  விவசாயிகள்.
தஞ்சாவூரில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள்.
Updated on
1 min read

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.

கர்நாடக அரசு பட்ஜெட்டில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ. 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியுள்ளதாக முதல்வர் எடியூரப்பா கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசு கர்நாடகாவுக்குத் துணை போவதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக மேகேதாட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதில் இந்தியத் தேர்தல் ஆணையம் உடனே தலையிட வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மேகேதாட்டுவில் தமிழக விவசாயிகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நாளை (28-ம் தேதி) நடக்க உள்ளது. இதையடுத்து, தஞ்சாவூரில் இன்று (27-ம் தேதி) முற்பகல் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், அங்கிருந்து புறப்பட்டனர்.

தஞ்சாவூர் ராஜராஜசோழன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள 15 வாகனங்களில் சுமார் 200 விவசாயிகள் புறப்பட்டனர். திருச்சி, கரூர், ஈரோடு, சத்தியமங்கலம், தாளவாடி வழியாக விவசாயிகள் கர்நாடகா சென்று, நாளை (28-ம் தேதி) காலை 10 மணிக்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in