

பணப் புழக்கத்தைக் குறைத்தால் மட்டுமே தேர்தல் நேர்மையாக நடக்கும் என உதகையில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உதகையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
உதகை ஏடிசி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கமல் பேசும்போது, ''நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பல்வேறு தேவைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டு காலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காய்கறிகளைச் சேமித்து வைக்க குளிர்பதன வசதிகள் செய்து தரப்படவில்லை. தேயிலைத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை.
மற்ற கட்சிகள் செய்யவில்லை என்பதைக் கூறுவதை விட நாங்கள் வந்தால் என்ன செய்வோம் என்பதைக் கூறுவதே சிறந்தது. எங்களது வேட்பாளர்களை நீங்கள் தேர்வு செய்தால் அவர்கள் சட்டப்பேரவையில் உங்களது குரலாக இருப்பார்கள். நீலகிரி மாவட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறி தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பார்கள். எங்களது வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை நீங்கள் பார்வையிடலாம்'' என்றார்.
நிருபர்களிடம் கூறுகையில், ''பணப் புழக்கத்தைக் குறைத்தால் மட்டுமே தேர்தல் நேர்மையாக நடக்கும். தற்போது வேட்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது சிலர் ஏவலால் நடக்கிறது. நான் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்று கமல் தெரிவித்தார்.
கடுப்பாகிய கமல்:
கமல் வருகிறார் என்பதால் கூட்டம் அதிக அளவில் இருக்கும் எனக் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டம் இல்லாததால், உற்சாகம் இல்லாமல் பத்து நிமிடமே பேசி குன்னூர் சென்றுவிட்டார்.