Last Updated : 27 Mar, 2021 12:41 PM

 

Published : 27 Mar 2021 12:41 PM
Last Updated : 27 Mar 2021 12:41 PM

தேர்தல் சோதனைப் பணியில் அலட்சியம் காட்டிய 3 பேர் பணியிடை நீக்கம்: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன்

கோவை

தேர்தல் சோதனைப் பணியில் அலட்சியம் காட்டிய, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவைக் கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்த குழு) அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைத் தாண்டி எடுத்துச் செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதாக வரும் புகார்களைப் பெறும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட பறக்கும் படை அல்லது நிலையான கண்காணிப்புக் குழுவுக்குத் தகவல் தெரிவித்து விடுகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல் அறிந்தும், சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினர் உடனடியாகச் செல்லாமல் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சென்றுள்ளனர்.

இதைக் கண்டறிந்த வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பொது மேற்பார்வையாளர் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவின் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளிங்கிரி, காவலர்கள் பிரசாந்த், குமரவேல் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவர்களைத் தேர்தல் பணியில் இருந்து விலக்கவும், வால்பாறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x