Published : 27 Mar 2021 10:15 AM
Last Updated : 27 Mar 2021 10:15 AM

பெரியார் -  அண்ணா - கருணாநிதி பிறந்த மண்; வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, நம்முடைய தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

ஈரோடு 

ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன்மானம், சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும், இது தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கருணாநிதி பிறந்த மண் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:

உங்களிடத்தில் வாக்குக் கேட்க ஆதரவு கேட்க ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பணியாற்றிய ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். மறைந்தாலும் நம்முடைய உள்ளத்தில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய குருகுலமான இந்த ஈரோட்டிற்கு உங்களை நாடி உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

எழில்மிகு மாநகரின் தொகுதியான ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு. வாகை பெருந்துறை என்று அழைக்கப்பட்ட பெருந்துறை. அதிகமான பாசனப் பகுதி உள்ள ஊர்தான் மொடக்குறிச்சி. இவ்வாறு பெருமைக்குரிய தொகுதிகளை கொண்டிருக்கும் ஈரோடு மாவட்டத்திற்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இந்த கொங்கு வட்டாரத்திற்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தந்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி. தலைவர் கருணாநிதி ஐந்து முறை ஆட்சி பொறுப்பில் இருந்தபோது இந்த கொங்கு வட்டாரத்தில் ஆற்றியிருக்கும் பணிகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் நினைவுபடுத்த சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 1955-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. 1955-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்தாலும் அந்தக் கோரிக்கையை 1975-ஆம் ஆண்டு செய்துகொடுத்த ஆட்சி தான் திமுக ஆட்சி - தலைவர் கருணாநிதி தலைமையில் இருந்த ஆட்சி.

நான் ஏதோ பொத்தாம் பொதுவாகப் பேசுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஆதாரத்தோடு தேதியோடு சொல்கிறேன். 16.05.1975-ஆம் நாள் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஜி.ஓ.எண் எம்.எஸ். 371 அதுதான் அந்த அரசாணை. அதற்குப்பிறகு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு பிறகு கோவையில் தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சர்க்கரை மன்றாடியார் கருணாநிதியை புகழ்ந்து பாராட்டி பேசினார். அவர், “டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி.சுப்பிரமணியம் செய்யாததை, என்னாலும் செய்ய முடியாததை முதல்வராக இருக்கும் கருணாநிதி செய்து முடித்திருக்கிறார். எனவே அவரை மனதார நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். லட்சக்கணக்கான மக்களைக் கொண்டிருக்கும் இந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு இனி நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் பல நன்மைகளை நாங்கள் அடையப்போகிறோம்” என்று அவர் பேசினார்.

அதற்குப்பிறகு நிறைவாகப் பேசிய தலைவர் கருணாநிதி, “நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன். இப்பொழுது உங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது சலுகை அல்ல, உரிமை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள்.

அத்தகைய உரிமையை கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு பெற்று தந்த இயக்கம் தான் திமுக. – அதைச் செய்த தலைவர்தான் கருணாநிதி.

இன்றைக்கு மாநில அரசுப் பணிகளை மட்டுமல்ல, மண்டல் கமிஷன் மூலமாக மத்திய அரசுப் பணிகளிலும் இச்சமூகத்தினர் சேர்வதற்கு வாசல் அமைத்துக் கொடுத்ததும் திமுக அரசுதான்.

இதேபோல அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்காக உள்ஒதுக்கீடு கேட்ட போது 3 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்த அரசும் திமுக அரசு தான் - கருணாநிதி தலைமையில் இருந்த திமுக அரசு தான். அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நாள், கருணாநிதி சட்டப்பேரவைக்கு வரமுடியவில்லை.

அப்பொழுது அவர் உடல் நலிவுற்று முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு அருமையான சட்டம் நிறைவேறப் போகிறது. என் வாழ்நாளில் இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சட்டம் நிறைவேறப்போகிறது. எனவே நான் எப்படியும் சட்டமன்றத்திற்குப் போக வேண்டும் என்று தலைவர் கருணாநிதி அழுத்தந் திருத்தமாக சொன்னார்கள். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.

அதனால், துணை முதல்வராக இருந்த என்னை அழைத்து கருணாநிதி உத்தரவிட்டார். கருணாநிதி சார்பில் அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றிய பெருமை எனக்கு கிடைத்தது. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு நான் வரிசைப்படுத்தி சொல்கிறேன். இது போன்று இன்றைக்கு முதல்வராக இருக்கும் பழனிசாமிக்கு வரிசைப்படுத்தி சொல்லும் ஆற்றல் உண்டா?

மேற்கு மண்டலம் எங்களுடைய மண்டலம் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, உங்களால் இந்த மண்டலத்திற்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன? அதை நீங்கள் பட்டியல் போட முடியுமா?

உங்களால் இந்த மேற்கு மண்டலத்திற்கு கிடைத்திருப்பது எல்லாம் வேதனைகள் - சோதனைகள் - துரோகம் தான். நான் அதையும் வரிசைப்படுத்தி சொல்கிறேன்.

ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக் கொண்டதன் மூலமாக சிறு, குறு தொழில்களை இந்த மண்டலத்தில் சிதைத்தது முதல் துரோகம். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக இந்த மண்டலத்தின் முக்கியத் தொழிலான வேளாண்மையை சிதைத்தது இரண்டாவது துரோகம்.

எட்டு வழி பசுமை சாலை மூலமாக விவசாய நிலங்களை அந்த மக்களிடமிருந்து பறித்து, போராடிய மக்களை அடித்து உதைத்து கொடுமைப் படுத்தியது மூன்றாவது துரோகம்.

மற்ற மாநிலங்களில் சாலைகளில் குழாய்கள் பதிக்கும் போது, இங்கு மட்டும் விவசாய நிலங்களில் குழாய்களை பதித்து இந்த வட்டாரத்து விவசாயிகளை நிம்மதி இல்லாமல் ஆக்கியது நான்காவது துரோகம்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய அ.தி.மு.க.வினரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்களே அது ஐந்தாவது துரோகம்.

இந்தியாவிலேயே தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வீடு வீடாக மீட்டர் பொருத்தி கொண்டிருக்கிறீர்களே அது ஆறாவது துரோகம். கோவையின் பெருமை மிகு சிறுவாணி தண்ணீரை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது ஏழாவது துரோகம்.

தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் என யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாமல் கொள்ளை அடிப்பதற்காகவே அவசரகதியில் அவினாசி சாலையில் பாலம் கட்ட தொடங்கியது எட்டாவது துரோகம்.

உறவினர்களுக்கு பினாமிகளுக்கு மட்டுமே டெண்டர் கொடுத்து, மற்ற ஒப்பந்ததாரர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து அல்லது மற்ற ஒப்பந்ததாரர்களை தனது உறவினர்களின் கொத்தடிமைகளாக மாற்றியது ஒன்பதாவது துரோகம்.

அதேநேரத்தில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். ஆட்டோ வாங்குபவர்களுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

விவசாய விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமையும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், வாடகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கெய்ல் எரிவாயு மற்றும் ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய்கள் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படுவதைத் தடுத்து, சாலையோரங்களில் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நலன்காக்க நலவாரியம் அமைக்கப்படும்.

மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

தமிழர்களுடைய சுயமரியாதை இன்றைக்கு பறி போய்க்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன்மானம் – சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இது தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கருணாநிதி பிறந்த மண்.

இன்றைக்கு இந்தியை கொண்டு வந்து, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து, நீட் தேர்வைத் திணித்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவுகளைச் சிதைத்து, மதவெறியைத் தூண்டி நாட்டைத் துண்டாட நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்தத் தமிழ்நாட்டில் பலிக்காது. மாநில உரிமைகளைப் பாதுகாக்க, நம்முடைய தமிழகத்தை மீட்க, நீங்கள் அத்தனை பெரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x