

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான கடம்பூர் செ.ராஜூ (கோவில்பட்டி), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), போ.சின்னப்பன் (விளாத்திகுளம்), பெ.மோகன் (ஓட்டப்பிடாரம்), கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) மற்றும் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தூத்துக்குடி) ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கயத்தாறில் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவையும், அமைச்சர்களையும் விமர்சனம் செய்து வருகிறார். இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடும் எனக் கூறுகிறார்.
அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கு என்று ஸ்டாலின் கோவில்பட்டி தொகுதி கயத்தாறுக்கு வந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தப்போவதுமில்லை.
திமுகவுக்கு இந்தத் தேர்தல் இறுதித் தேர்தலாக இருக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். சிலர் அதிமுக தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். அதனையும் முறியடித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதிமுக மக்கள் இயக்கம். மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட கட்சி. தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றால் தான் எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும். தமிழக மக்களை நம்பித்தான், எனக்குப் பின்னாலும் தமிழகத்தில் அதிமுக 100 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா கூறினார்.
கோவில்பட்டியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் ஏராளமான அம்மா மினி சிறிய மருத்துவமனை தொடங்கி உள்ளோம்.
கோவில்பட்டிக்கு ரூ.90 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி - வைப்பாறு இணைப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிவுள்ளது.
ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மகக்ளுக்காக அரசு எப்போதும் உழைக்கும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, தொடக்க வேளாண்மை வங்கியில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏப்.1 ம் தேதி முதல் பம்ப் செட்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவித்திருக்கிறோம். ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங் மிஷின் வழங்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். கேபிள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு குடிநீர், கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான சேவையை செய்து வருகிறது. விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. எம்ஜிஆர்., ஜெயலலிதா கண்ட கனவு நனவாக வேண்டும். அதற்கு அதிமுக ஆட்சி தொடர வேண்டும்.
காலையில் இருந்து பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து செய்து, தொண்டை மங்கி போய்விட்டது. இருந்தாலும் கயத்தார் மக்களை பார்க்க வேண்டும் என்று வேகமாக வந்தேன். உங்களை சந்திக்கின்ற வாய்ப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவாக்கி வந்தார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கு சிறந்து விளங்குகிற முதல் மாநிலம் தமிழகம் தான். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. எப்போதும் மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியாது.
அந்தளவு கடுமையான மின்வெட்டு. அதிமுக அரசு திறமையான ஆட்சி செய்த காரணத்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. தொழிற்சாலை, விவசாயிகளுக்குத் தேவையான தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர்.
2019ம் ஆண்டு நடத்திய உலக தொழில் மாநாட்டின் காரணமாக, 304 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்படுத்திய காரணத்தால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 435 பேர் மருத்துவக் கல்வி படிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு 600 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பார்கள். ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மருத்துவர் ஆவார்கள். அவர்களது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது. நாட்டிலேயே முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது.
ஸ்டாலின் பொய்யான செய்தி, அவதூறு செய்தி பரப்பி வருகிறார். சிறந்த மாநிலம் என்பதற்கு சான்று, மத்திய அரசு வழங்குகின்ற விருதுகள் தான். அந்த வகையில் மத்திய அரசின் பல விருதுகளை தமிழகம் பெற்றிருக்கிறது.
அந்தளவுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுகிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகிறேன், என்றார் அவர்.