Published : 27 Mar 2021 09:22 AM
Last Updated : 27 Mar 2021 09:22 AM

மதவெறி நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜக; ஸ்டாலின் விமர்சனம்

கரூர்

தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்த நாட்டை மதவெறி நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இன்றைக்கு பாஜக ஈடுபட்டிருக்கிறது, அதற்கு இங்கிருக்கும் துதிபாடி அடிமை எடுபிடி அரசும் துணை நிற்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.

கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியதாவது:

உங்களைத் தேடி நாடி, உங்களிடத்தில் வாக்கு கேட்டு, ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

திமுகவின் ஊரான கரூர். சேரர்களின் தொழில் நகரமான கரூர். முதன்முதலாக தலைவர் கருணாநிதி கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலைத் தொகுதியில் தான் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேவல் விளையாட்டுக்கு பெயர் போன அரவக்குறிச்சி. காவிரி ஆறும் கடவூர் மலையும் சேர்ந்த கிருஷ்ணராயபுரம். இவ்வாறு பல பெருமைகளைப் பெற்றிருக்கும் தொகுதிகளுக்கு உங்களில் ஒருவனான ஸ்டாலின் வந்திருக்கிறேன்.

பல்லாயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். ‘ஆகா – ஓகோ‘, ‘இந்திரன் – சந்திரன்’ என்று முதலமைச்சர் பழனிசாமியைப் புகழ்ந்து பாராட்டி, மக்களுடைய வரிப் பணமான அரசாங்கப் பணத்தில் விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். அரசாங்கப் பணம் என்றால் மக்களின் வரிப்பணம். அதில் எப்படிக் கொடுத்தீர்கள்?

பொய் விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் உங்களுடைய முகத்திரையை இந்தத் தேர்தலில் கிழிக்கப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

பழனிசாமியின் அமைச்சரவையில் – அ.தி.மு.க.வின் அமைச்சரவையில் இரண்டு விஜயபாஸ்கர் இருக்கிறார்கள். ஒன்று குட்கா விஜயபாஸ்கர். இரண்டு மணல் கொள்ளை விஜயாபாஸ்கர். இரண்டு பேரும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையப்போகிறார்கள். டெபாசிட் காணாமல் ஓடப்போகிறார்கள். அதுதான் நடக்கப்போகிறது.

அமராவதி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவுகளைக் கலக்கச் செய்பவர்களைக் காப்பாற்றி வருகிறார் இந்த விஜயபாஸ்கர். பசுமைத் தீர்ப்பாயம் விவசாயிகளுக்கு இழப்பீடு தரச் சொல்லி பத்து ஆண்டுகள் ஆகப்போகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத அவர்களைக் காப்பாற்றி வருகிறார்.

அதேபோல அமராவதி ஆற்றில் தண்ணீர் திருடுபவர்களுக்கு துணையாக இருக்கிறார். யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி மறுத்தாலும், அவரைப் பந்தாடியவர்தான் இந்த மணல் திருட்டு விஜயபாஸ்கர்.

அது மட்டுமா பல கோடி மணல் கொள்ளை நடக்கிறது. அதை தட்டிக் கேட்டு போராடிய முகிலனைப் பல்வேறு வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளி இருக்கிறார்கள். ஆற்று மணல் கொள்ளையை நீதிமன்றம் தடை செய்த நிலையில் எம்-சாண்ட் குவாரிகளை தன்னுடைய உறவினர்கள் பெயரில் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதை நடத்துபவர்களை மிரட்டிக் கொள்ளை அடிப்பவர்தான் இந்த மணல் கொள்ளை விஜயபாஸ்கர்.

அதேபோல அவருடைய துறை போக்குவரத்துத் துறை. அந்தத் துறையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவற்றை தனது பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டுமென லாரி உரிமையாளர்களை பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார். பிறகு அவர்கள் என்னைச் சந்தித்தனர். பின்னர் சட்டரீதியாக அணுகியிருக்கிறார்கள். கரூர் அரசு பேருந்துகளுக்கு ஸ்டாண்ட் கட்டுவதற்கு தனது பினாமிகளுக்கு ஒப்புதல் தருவதைத் தொடர்ந்து பாரம்பரிய பஸ் பாடி கட்டும் உரிமையாளர்கள் இன்றைக்கு குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான், இந்த ஊழல் விஜயபாஸ்கரை ஓட ஓட விரட்டும் நாள்தான், வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி.

இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் கொள்ளை - ஊழல் - லஞ்சம் என்று ஒரு மோசமான ஆட்சியை பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நடத்திக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது, பயிற்சி பெற்ற காவலர்களை வைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல சாத்தான்குளத்தில் இரட்டைக்கொலை தந்தை – மகன். இருவரையும் போலீஸ் லாக்கப்பில் அடித்து, உதைத்து, சித்திரவதைக்கு ஆளாக்கி கொன்றிருக்கிறது இந்த பழனிசாமி தலைமையில் இருக்கும் காவல்துறை.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவில் பதிவு செய்து, அதை அவர்களுக்கு போட்டுக் காட்டி, மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல் மூன்று வருடங்களாக தொடர்ந்து நடந்திருக்கிறது.

சென்னையில் ஆளுங்கட்சியின் சார்பில் வைத்த பேனரால் விபத்துக்குள்ளாகி இறந்து போன சுபஸ்ரீ. அந்த மரணத்திற்கு காரணமான அரசுதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசு.

கோவையில் அ.தி.மு.க.வின் கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற ஒரு பெண் தனது ஒரு காலை இழந்துவிட்டார். நான் அந்தப் பெண்ணை நேரடியாக சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.

அதேபோல டெல்டா பகுதியில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பிரச்சினை. தேனியில் நியூட்ரினோ பிரச்சினை. சேலத்தில் எட்டு வழி சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்திற்கும் காரணமான ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அரசு.

இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். 6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்கிறார்கள். நான் கேட்கிறேன். எத்தனை தொழிற்சாலைகள் வந்திருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள்? அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நான் கேட்டேன். இதுவரையில் அதற்கு பதில் இல்லை. மக்கள் நலத் திட்டங்கள் எதையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்தவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

கரோனா என்ற கொடிய நோய் உலக அளவில் பரவி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. அதனை தடுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை உட்பட பல்வேறு தருணங்களில் வலியுறுத்தினோம். அலட்சியமாகப் பேசினர்.

எங்கள் அம்மா ஆட்சியில் ஒரு உயிர் கூட போகாது என்று சொன்னார். இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அந்தக் கொடுமைக்கு காரணம் பழனிசாமி அரசு தான் – அதிமுக அரசுதான்.

இன்றைக்கு விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், சிறு - குறு தொழில் செய்பவர்கள், பெரும் தொழில் நிறுவனங்கள், எந்தத் தரப்பும் இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை.

எந்தெந்தத் திட்டங்களில் கொள்ளையடிக்க முடியுமோ, அவற்றில் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி. சுருக்கமாக கமிஷன் - கரப்ஷன் - கலெக்சன் இதுதான் இன்றைக்கு பழனிசாமியின் கொள்கையாக இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு பயன்படாத - எதற்குமே பயன்படாத இந்த ஆட்சியை விரட்டி அடிக்கும் நாள்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற உறுதிமொழிகளைத் தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.

தொழில் வளர்ச்சிக்காக, கரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும், டிட்கோ - சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டது போல, வங்கிகள் - நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஏற்பாடு செய்ய சிறப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசு துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர்கள் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும்.

அதேபோல, நெசவாளர்களுக்குத் தனிக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். அடையாள அட்டை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் இலவச மின்சாரம் இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்காக ஜவுளி ஆணையம் தனியாக அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை 4 லட்சம் ரூபாய் என அந்தத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம், 8 சதவிகிதமாகக் குறைக்கப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

எனக்கும் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். முதல்வர் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நான் முதல்வராக வேண்டும் என்றால் இந்த 4 பேரும் வெற்றி பெற்றாக வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில், எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்த நாட்டை மதவெறி நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இன்றைக்கு பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் துதிபாடி அடிமை எடுபிடி அரசும் துணை நிற்கிறது.

நான் சொல்கிறேன் - இது திராவிட மண். தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். இங்கு உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் பலிக்காது, எடுபடாது.

இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்தான். அதேநேரத்தில் நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதையும் மறந்துவிடாதீர்கள். தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நடக்கின்ற தேர்தல். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க நடக்கின்ற தேர்தல்.

தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x