

அதிமுக வின் சக்தி என்ன என்பதை ஸ்டாலின் வந்து பார்க்க வேண்டும், இந்த தேர்தல் தான் திமுகவின் இறுதித்தேர்தல் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை:
ஸ்டாலின் அதிமுக விற்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இந்த தேர்தலோடு இருக்கது எனக் கூறி வருகிறார். அதிமுக வின் சக்தி என்ன என்பதை இந்த சாத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் வந்து பார்க்க வேண்டும். இந்த தேர்தல் தான் திமுக வின் இறுதித்தேர்தல்.
எங்கள் அரசு இந்த சாத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சாத்தூர் நகரில் இருபாலர் பயிலக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஜெயலலிதா கொடுத்தார்கள். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கின்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சாத்தூர் தாலுகா அலுவலம், புதிய அரசு மருத்துவமனை கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளோம். வெம்பக்கோட்டையை தனியாகப் பிரித்து புதிய தாலுகா அமைக்கப்பட்டுள்ளது.
வீடில்லாத ஏழை நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா மின்சாரம் 750 யூனிட்ட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
இது பட்டாசு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பட்டசு தொழில் சிறக்க அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்த அரசு அம்மாவின் அரசு. தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்த அரசு எங்கள் அரசு.
சாத்தூர் பகுதி விவசாயம் மற்றும் பட்டாசு தொழில் நிறைந்த பகுதி. இந்த இரண்டு தொழில்களும் சிறக்க தமிழகஅரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.
தீப்பெட்டி தொழில் சிறக்க, பட்டாசு தொழில் ஏற்றம் பெற, வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் ஆர். கே. ரவிச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.