

பட்டா வாங்கித் தருவதாகக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் ரூ.2 ஆயிரம் வசூல் செய்துள்ளனர் என்று மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் ‘பகீர்’ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை தொகுதிக்கு நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார் என்று என்னை மக்கள் ஆரவாரமாகவும், உற்சாகமாகவும் வரவேற்கிறார்கள். 10 ஆண்டு காலம் இந்தத் தொகுதியில் அடிப்படை வசதியில்லை. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி, ஜீவா நகர் போன்ற பகுதிகளில் பட்டா வழங்குவதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்கள் வீட்டிற்கு வீடு ரூ.2 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
அவர்கள் என்னிடம் பட்டா கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர் ஆதரவாளர்களின் மோசடி பற்றியும் புகார் செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
மக்களும் நேரடியாக இதைச் சொல்வார்கள். மக்களின் இந்த பட்டா கோரிக்கையை கட்சித் தலைமையிடம் தெரிவித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு வழங்குவோம். மோனோ ரயில் திட்டம், ரூ.700 கோடியில் தல்லாகுளம் முதல் அரசரடி வரையிலான பறக்கும் பாலம், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகே மேம்பாலம், ரூ.130 கோடியில் கோரிப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் திட்டத்தை அறிவித்து இதுவரை அவற்றை செயல்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த முயற்சியும் செய்யவில்லை.
அதுபோல், மாட்டுத்தாவணியில் இருந்து சமயநல்லூர் வரை புறவழிச்சாலை, வைகை-காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், மதுரை கப்பலூரில் 2,400 வீடுகள் அமைப்போம் என்று அறிவித்து அதையும் நிறைவேற்றவில்லை.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் உறவினர் அவரது படத்தைப்போட்டு சீட்டு கம்பெனி திறந்து பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த நிறுவனம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை என்னுடைய சொந்த கிராமமான கரடிக்கல் அருகேதான் அமைகிறது. அந்த மருத்துவமனை வருமா?வராதா? என்பதே தெரியவில்லை. அதற்காக அமைச்சர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
பிரச்சாரத்திற்கு செல்லும் வழிகளில் தெருவிளக்கு எரியவில்லை. சாலைகள் சரியில்லை. மயான வசதி முறையாக இல்லை. பழங்காநத்தம்- பைபாஸ்ரோட்டை இணைக்கும் பாலத்தை மாற்றி விசாலமான புதிய பாலம் அமைக்கப்படும். குப்பை வண்டிகள் குடியிருப்புகளுக்கு வராமல் நகரில் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ பெயரில் மதுரையை நாசப்படுத்திவிட்டனர். மீனாட்சியம்மன் கோயில் சுற்றிலும் அனைத்து சாலைகளையும் தோண்டிப்போட்டு பக்தர்களை கோயிலுக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, ஜெயராமன் உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.