

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாட்டில் 12 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி குற்றம்சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி பேசியதாவது: மோடி தலைமையிலான அரசால் பட்டாசு தொழில் பல்வேறு துன்பங்களை சந்தித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி பட்டாசு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் 12 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். உள்நாட்டு உற்பத்தி குறைந்து பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். தமிழர்களின் அபாயமாக பாஜக உள்ளது. விவசாய சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அதிமுக அரசு அதை ஆதரித்தது. இதன் மூலமே பாஜக கட்டுப்பாட்டில் அக்கட்சி உள்ளதும், பயந்துபோய் உள்ளதும் தெளிவாகிறது.
வேலை வாய்ப்பு வழங்குவதில் எந்த அக்கறையும் இந்த அரசு காட்டவில்லை. சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. ஸ்டாலின் சிறந்த நிர்வாகி. அவரது தந்தையிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளார். நிச்சயம் அவரதுஆட்சி அமையும். பிரச்சாரத்துக்கு ராகுல்காந்தி வருவதைப்போல, பிரியங்கா காந்தியும் தமிழகம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.