Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி மருதமலை கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு `கோயில் அடிமை நிறுத்து' என்ற பதாகையை ஏந்தியபடி, சத்குருவின் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்கள்.

கோவை

கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கோயில்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் மூலமாகவும், ஆன்மிகரீதியான சக்தி ஸ்தலங்களாகவும் உள்ளன. நம் முன்னோர் பல நூறு ஆண்டுகளாக பாதுகாத்து வந்த கோயில்கள், தற்போது அரசின் அடிமைத்தனத்தில் சிக்கி, படிப்படியாக அழிந்து வருகின்றன.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 44 ஆயிரம் கோயில்களில், 12 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜைகூட நடப்பது இல்லை. பல கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்தும், பொறுப்பற்ற நிர்வாகத்தால் 34 ஆயிரம் கோயில்கள் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. 37 ஆயிரம் கோயில்களில் பூஜை செய்வது, பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்துப் பணிகளுக்கும் ஒரு ஊழியர் மட்டுமே இருக்கிறார்.

ஏறத்தாழ 1,200 சிலைகள் திருடுபோயுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை, அறநிலையத் துறையே சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், அடுத்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 முக்கிய கோயில்களைத் தவிர்த்து, மற்ற கோயில்கள் இல்லாமல் போய்விடும்.

இந்த அவல நிலைக்குத் தீர்வுகாணும் வகையில், இந்தியாவில் உள்ள மற்ற மத வழிபாட்டுத் தலங்களைப்போல, இந்து கோயில்களையும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், புதுச்சேரி ஆகியஇடங்களில் உள்ள 11 பிரசித்திப்பெற்ற கோயில்களில், பக்திபாடல்களைப் பாடி, பொது மக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

இதையொட்டி, கோவை மருதமலை முருகன் கோயிலில் நேற்று மாலை பொதுமக்கள் கந்த சஷ்டி கவசம் பாடி, தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும்,கோயில்களின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி `கோயில்அடிமை நிறுத்து' என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி நின்றும், தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர். இதேபோல, ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பும்,ஏராளமான மக்கள் திரண்டு ஆதரவு அளித்தனர். இவ்வாறுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x