Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

கோவையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பாடுபடுவோம்: தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் வாக்குறுதி

கோவை

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் தொழில், உட்கட்டமைப்பு மற்றும் அனைத்து துறை வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய அம்சங்கள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் தொழில் துறையினர் கலந்துரையாடல் கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் சி.பாலசுப்ரமணியன் வரவேற்றார். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்திய தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சைமா, சிஐஐ உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர்கள் பேசியதாவது:

நா.கார்த்திக் (திமுக - சிங்காநல்லூர்): கோவைக்கு திமுக ஆட்சியில்தான் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டன. நான் வெற்றி பெற்றால் கிடப்பில் உள்ள பாலப் பணிகள், சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாடு, விமானநிலையம் விரிவாக்க திட்டங்கள் முடிக்கப்படும். சூயஸ் நிறுவனத்துடனான குடிநீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

ஆர்.மகேந்திரன் (மநீம-சிங்காநல்லூர்): கோவை தொழில் துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். விமானநிலையம் விரிவாக்கம், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். கோவையில் மற்றுமொரு அரசு மருத்துவமனை கொண்டு வரப்படும்.

அம்மன் கே.அர்ச்சுணன் (அதிமுக - கோவை வடக்கு): கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.6,350 கோடி செலவில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவித்து, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால் கோவையின் தொழில் துறை வளர்ச்சி பெறும். கோவையில் தகவல் தொழில்நுட்ப மையம், கணபதியில் சிறு, குறு தொழில்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்- கோவை தெற்கு): தொழில் துறை வளர்ச்சிக்கென கைவினை தொழில் செய்வோர் பாதிக்காத வகையில் தங்க நகை பூங்கா, நெசவாளர் வளர்ச்சிக்கென ஜவுளிச் சந்தை, வெட் கிரைண்டர் உட்பட அனைத்து தொழில் துறை கோரிக்கைகளை யும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். அரசு கலைக் கல்லூரியை மேம்படுத்துவேன்.

வானதி சீனிவாசன் (பாஜக - கோவை தெற்கு): பாதுகாப்பு தளவாட உற்பத்தி திட்டங்கள் மூலமாக தொழில் துறை பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்காக நீட் தேர்வு பயிற்சி இலவசமாக நடத்தப்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் விமானநிலையம் விரிவாக்கம் உட்பட கோவையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன்.

சேலஞ்சர் துரை (அமமுக - கோவை தெற்கு):

விமானநிலையம் விரிவாக்கம் என்பது கோவையின் வளர்ச்சிக்கு முக்கியமானது. தொழில் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x