

கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிங்காநல்லூர் காய்கடைப் பேருந்து நிறுத்தம், சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம், உப்பிலிபாளையம் மைதானம், நீலிக்கோணாம்பாளையம் மைதானம், ஒண்டிப்புதூர் சுங்கம், நெசவாளர் காலனி, சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மநீம வேட்பாளர்கள் யாரும் இதுவரை சிறை சென்றதில்லை. ஏதாவது ஒரு வகையில் நற்பணி செய்தவர்களாகத்தான் இருப்பர். எங்களை வெளியூர்க்காரர்கள் என்கின்றனர். நல்ல தமிழனுக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர். என்னை வெளியூர்க்காரர் என்று விமர்சிப்பவரே மயிலாப்பூர்காரர்தான்.
இலவசம் உங்கள் ஏழ்மையைப் போக்காது, அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யாது. குடிக்க தண்ணீர் கேட்டால், வாஷிங்மிஷின் தருகின்றனர். இதுதான் அவர்களின் அரசியல் அறிவு. என் 60 வருட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியது தமிழகம்தான். எனவே, என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.