

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ஏ.யோகேஸ்வரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூடலூர் காந்தி சிலை அருகே நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயபிரபாகரன் பேசியதாவது:
தேமுதிக, அமமுக கூட்டணியில் உள்ள அதிமுக தொண்டர்களே உண்மையான அதிமுக தொண்டர்கள். ஏனென்றால் 2011-ம்ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருந்தபோது தேமுதிக, அதிமுக உறவு எவ்வளவு சுமூகமாக இருந்ததோ அதேநிலை இன்றும் உள்ளது. விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் கலவையாக இனி என்னை நீங்கள் பார்ப்பீர்கள். ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதாக அதிமுக அரசு தற்போது வாக்குறுதி அளிக்கிறது. கரோனா காலத்தில் மக்கள் பட்டினி கிடந்தபோது, மாதம் ரூ.100 கூட வழங்கவில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் பழைய இரும்புக் கடையில்தான் போடப்பட்டன. இலவசங்களால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் உள்ளூர் மக்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. உங்கள் வேட்பாளரும், உள்ளூரைச் சேர்ந்தவர்தான். இவ்வாறு அவர் பேசினார்.