

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால்ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், காங்கயம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான ஈஸ்வரன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், சோபா, சனுஜா, சிவானந்தம், ராஜேந்திர பிரசாத், ரஞ்சிதா ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் புஷ்பா திரையரங்கு வளைவு, வளர்மதி மேம்பாலம், பல்லடம் என்.ஜி.ஆர். சாலை மற்றும் காங்கயம்ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
பள்ளி, கல்லூரிக்கு படிக்க சென்றால் கல்விக் கொள்ளை நடக்கிறது. மருத்துவமனைகளில் உயிர் வியாபாரமாகிவிட்டது. ஆற்று மணல் கொள்ளை எனஎல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிறோம். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஆசிரியர் பணி நியமனம், இடமாற்றம், பிறப்பு - இறப்பு சான்றிதழ் என அனைத்துக்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக, ரூ.26 லட்சத்தை மீட்டு மக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
திமுகவுக்கு மாற்றாக அதிமுகவுக்கும், அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கும் வாக்களிக்கிறார்கள். இது அல்ல மாற்றம். ஆட்சியில் இருந்த ஆட்கள் மாறுவார்கள். ஆனால், ஆட்சி அமைப்பு முறை மாறவில்லை. இரண்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும். இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் சாராய ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த ஒன்றரை கோடி பேர் பணிபுரிகிறார்கள். அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்யதொடங்கிவிட்டார்கள். மின் பொறியாளர் பணி, தபால் துறை உள்ளிட்டவற்றில் வடமாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள அடிமை அரசுகள். ரயில்வே துறையிலும் வடமாநிலத்தவர்தான் அதிகளவில் உள்ளனர். தமிழர்களை குறைவாக பணியமர்த்துகின்றனர்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை, வீதி பெயர்களும் தமிழில் இல்லை. வாக்களிக்க மட்டுமே அரசுப் பள்ளிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காங்கிரஸும், திமுகவும் கைகோர்த்து தமிழர்களை அழித்து, ஈழத்தில் 60 ஆண்டு கால கனவை நசுக்கின. வரும் தேர்தலி்ல் போட்டியிட திமுகவில் பெண்களுக்கு 12 இடங்களும், அதிமுகவில் 11 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் மட்டுமே 117 இடங்களை வழங்கியுள்ளோம். சம காலத்தில் சமூக நீதி,பெண் விடுதலையை காப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே. கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கவில்லை; கொள்கைகளை கொட்டி சந்திக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.