

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பருவமழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரை ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஆண்டுக்கு 50 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்று கணித்து, 1958-ல் பிஏபி திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில், கேரள மாநிலத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, தமிழகம் ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீரை கேரள மாநிலத்துக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இடைமலையாறு அணை கட்டிய பிறகு, ஆனைமலையாறு அணைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கேரள மாநிலம் ஒரு துணை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1970-ல் இடைமலையாறு அணையைக் கட்டத் தொடங்கிய கேரள அரசு, 1985-ல் பணிகளை முடித்து, அதைப்பயன்பாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டது. ஆனால், தமிழக அரசு அணையைக் கட்ட உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 8.5 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1958-ல் ஒப்பந்தம் மேற்கொண்டு 63 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அரை நூற்றாண்டைக் கடந்தும், ஓர் அணைத் திட்டத்தை மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது கொங்கு மண்டல விவசாயிகளிடையே மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாநிலங்களின் ஒப்பந்தப்படி, மேல் நீராறு தண்ணீர் முழுவதும் தமிழகத்துக்கு சொந்தம் என்பதால், மேல் நீராற்றில் இருந்து 14.40 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு சுரங்கப் பாதை அமைத்து, நல்லாறு பகுதிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைத்து, காண்டூர் கால்வாயுடன் இணைக்கலாம் என வல்லுநர் குழு பரிந்துரைந்தது. இதற்கு நல்லாறு அணைத் திட்டம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், 4.50 லட்சம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பயிர் செய்து, உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். விவசாயிகள் முழுமையாகப் பயனடைவர். கூடுதலாக 250 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.
இதுகுறித்து பிஏபி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறும்போது, "பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே இருக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டங்களின்போது மட்டும் அதிகாரிகள் குழு அமைப்பதும், ஆய்வு செய்வதும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இனியும் விவசாயிகள் தேர்தல் நேர வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்களுக்கு, இந்த தேர்தல் மூலம் விவசாயிகள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.