

தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன், திருச்சுழி மூமுக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோரை ஆதரித்து அருப்புக்கோட்டையிலும், விருதுநகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்தும், சிவகாசியில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனை ஆதரித்தும், வில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளர் மான்ராஜை ஆதரித்தும், ராஜபாளையத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்தும், சாத்தூரில் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்தும் நேற்று பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டங்களில் முதல் வர் பழனிசாமி பேசியதாவது:
திமுக தலைமையிலான கூட் டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஏற்றம்பெற அமைக்கப்பட்ட கூட்டணி. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கான சலுகைகளையும், அதற்கான நிதியையும் பெற முடியும்.
விருதுநகர் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தாமிரபரணி குடிநீர்த் திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. காவிரி-குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதும் திருச்சுழி, அருப்புக்கோட்டை பகுதியில் தண்ணீர் வளம் பெருகும்.
ஜவுளிக்கான வாரச்சந்தை அமைக்கப்படும். சாயப்பட்டறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
விருதுநகர் மக்கள் 100 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து நவீன சிகிச்சைக் கருவிகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கிடைக்கும். பல் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங் கப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதியையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது அதிமுக ஆட்சி. கரோனா காலத்தில் 4 மாதங்கள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கினோம். ரூ.1,000 நிவாரணம் வழங்கினோம். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம். அமைதிப் பூங்காவாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் அராஜகம் வந்துவிடக் கூடாது. அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்கினால் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
பட்டாசுத் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது அதிமுக தான். தீப்பெட்டி, பட் டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததும், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியதும் நாங்கள்தான். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்ததும் அதிமுக அரசுதான். இவ்வாறு முதல்வர் பேசினார்.