ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எம்ஜிஆர் படப்பாடலை பாடி வாக்கு கேட்ட நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக்.
நடிகர் கார்த்திக்.
Updated on
1 min read

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, எம்ஜிஆர் திரைப்படப் பாடலை பாடி நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.

போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மனித உரிமைகள் காக்கும் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த் திக் பிரச்சாரம் செய்தார்.

தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் அவர் பேசியதாவது:

என் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவர் என்னை அதிக நேரம் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இருப்பினும் உங்கள் அன்புதான் எனக்கு மிகப்பெரிய டானிக். இதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. நான் பெரிதும் மதிக்கும் துணை முதல்வரை இணை முதல்வர் என்றுதான் அழைப்பேன். அவர் பெயரைக் கூட நான் சொல்லமாட்டேன். அந்த அளவுக்கு அவர் மீது மரியாதை உண்டு. என்னுடைய மூத்த சகோதரருக்காக இங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன். உங்களுக்காகத்தான் அவர் பாடுபடுகிறார். உங்களின் கரகோஷம் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும். இரட்டை இலைக்கு வாக்குகள் குவிய வேண்டும்.

ஒரு பாடலை பாடி நான் விடை பெறுகிறேன் என்றவர், "உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.." என்ற எம்ஜிஆர் நடித்த திரைப்படப் பாடலை பாடினார். பின்னர், நிறைய இடத்துக்கு நான் செல்ல வேண்டும். துணை முதல்வர் 1974-ம் ஆண்டு கட்சியில் சேர்ந்து, அன்று முதல் இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறார். மூன்று முறை முதல்வராகி உங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவருக்காக வாக்கு கேட்டு வருவது எனக்கு கிடைத்த பாக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து போடி பார்க் ஸ்டாப், தேவர் சிலை, விசுவாசபுரம், பத்ரகாளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in