

திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது பாஜக மாநில இணை அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
எனது அண்ணண் மகன் திருமணம் வரும் 15-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. 21-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் திருமண விழாவுக்கு அழைப்பதற்காக கருணாநிதியை சந்தித்தேன்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது எந்த நாட்டிலும் இல்லாத சட்டம். அபராதம் விதிக்க ஆரம்பித்தால் எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களுக்கு நாம் ரூ. 75 கோடி அபராதம் விதிக்க வேண்டியிருக்கும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் உடனுக்குடன் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் உள்ள நமது மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.