Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM

பாஜகவினர் எவ்வளவு முயற்சித்தாலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ஒருபோதும் மாற்ற விடமாட்டோம்: திருச்சி பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் உறுதி

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான பிரபு (திருச்சி கிழக்கு), வினோத் (திருச்சி மேற்கு), சோழசூரன் (திருவெறும்பூர்), கிருஷ்ணசாமி (மண்ணச்சநல்லூர்), செல்வரதி (ரங்கம்), கனிமொழி (மணப்பாறை), மலர் தமிழ் பிரபா (லால்குடி), தமிழ்ச்செல்வி (துறையூர்), தேவி (முசிறி) ஆகியோரை ஆதரித்து திருச்சி மலைக்கோட்டை கீழரண் சாலையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் ஜெயலலிதா ஆட்சி கொடுப்போம் என்கின்றனர். அதேபோல மு.க.ஸ்டாலின், கருணாநிதி ஆட்சி நடத்துவேன் என ஒருமுறை சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அவர்களுக்கு ஒரு இடத்தில் டெபாசிட் கிடைக்காது. அதனால்தான் திமுகவினர் அதுபற்றி பேசாமல் இங்கே மோடி ஆட்சி, பாஜக வந்துவிடும் என்கின்றனர். ஓட்டு விழாமல் போய்விடும் என்பதால் மோடி படத்தை அவரது கட்சிக்காரர்களே போடாமல்தான் இங்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிடுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற விடமாட்டோம். வெறும் 20 சீட் வாங்கிக் கொண்டு ஏன் இந்த வேலை. அதிலும் வெற்றி பெறப் போவதில்லை. இதற்கு ஓட்டுக் கேட்க பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர்.

திரும்ப, திரும்ப திமுக, அதிமுகவுக்கே ஓட்டு போடுவதால் என்ன நடக்கப் போகிறது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம். தனித்திறன் கல்விக்கு முன்னுரிமை அளிப்போம். உயிர்காக்கும் சிறந்த மருத்துவம் அளிப்போம். தாய்மொழியில் கல்வி கொடுப்போம்.

நச்சு ஆலைகளை நம்பிக் கொண்டிருக்காமல் நிலவளம் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். சிற்றூரின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம். நஞ்சில்லா உணவு வழங்குவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x