

ஓய்வூதியம் கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருவதாக, சுதந்திரப் போராட்டத் தியாகி திருச்சி ஆட்சியரிடம் நேற்று புகார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (86). இவர், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கோரி பல ஆண்டுகளாகப் போராடியும் இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை என்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் புகார் மனு அளித்தார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். சிறையிலும் அடைக்கப்பட்டேன். 1941-ம் ஆண்டு மணப்பாறை ரயில் நிலையத்தில் காந்தி பொதுமக்கள் மத்தியில் பேசும்போது அவருடன் இருந்ததற்கான புகைப்பட நகல் தவிர, பிற ஆவணங்கள் அனைத்தும் 1972-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போய்விட்டன.
எனக்கு 1979-ல் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான நிலப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கோரி பல ஆண்டுகளாக தலைமைச் செயலகம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை அலைந்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை” என்றார்.
சுந்தரத்திடம் விசாரித்த பிறகு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற சில ஆவணங்கள் அவசியம். சுந்தரத்தின் கோரிக்கை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியிருந்தால் விரைவில் ஓய்வூதியம் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.