Last Updated : 27 Mar, 2021 03:15 AM

 

Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM

பத்மநாபபுரம் தொகுதியில் இருமுனைப்போட்டி: பாஜக ஆதரவுடன் அதிமுக பலம் தக்க வைக்குமா திமுக?

நாகர்கோவில்

பத்மநாபபுரம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள திமுக மீண்டும் தொகுதியை தக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக,கம்யூனிஸ்ட்கள் என அனைத்து கட்சிகளுக்குமே வாக்குவிகிதம் பரவலாக உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுக கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. சிட்டிங் திமுகஎம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுககுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண்தங்கம் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் ஜெங்கின்ஸ், நாம்தமிழர் வேட்பாளராக சீலன், மக்கள் நீதிமய்யம் சார்பில் ஜெயராஜ் மற்றும் சுயேச்சைகள் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். இவர்களில் திமுக - அதிமுக இடையே இருமுனைப் போட்டி பலமாக உள்ளது.

பிரியும் வாக்குகள்

கடந்தமுறை கட்சி வாக்குகளுடன் சேர்த்து கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் பெற்றதால் மனோ தங்கராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இம்முறை ஆர்சி கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஜாண்தங்கம், அதிமுக வாக்குகளுடன், கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொகுதி பிரச்சினைகள்

தொகுதிக்கு பெயர் சொல்லும் அளவிலான திட்டங்களை மனோதங்கராஜ் செயல்படுத்தவில்லை என்ற குறை உள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, திற்பரப்பு அருவி என சுற்றுலா மையங்கள் நிறைந்த இத்தொகுதியில், சுற்றுலா மையங்களுக்கு செல்லும் சாலைகள் கூட சீரமைக்கப்படாமல் மோசமாக கிடக்கின்றன. தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்:

குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை பகுதியில் பணப்பயிரான ரப்பர் தொழிலை மேம்படுத்தும் வகையில் ரப்பர் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும். பரளியாற்று பகுதியில்போதிய நிலம் இல்லாமல் ரப்பர் ஆராய்ச்சிமையம் திட்டம் கைவிடப்பட்டது. திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், மருந்துகோட்டை, பத்மநாபபுரம் அரண் மனை, உதயகிரிகோட்டை, சிற்றாறு,பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, களியல் உட்பட இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா மையங்களை ஒன்றிணைத்து சூழலியல் சுற்றுலாவை கொண்டு வரும் திட்டம் நிறைவேறவில்லை.

இயற்கை தேன் நாட்டில் அதிகமாக உற்பத்தியாகும் இங்கு, தேனீ ஆராய்ச்சி மையம் அமையவில்லை. மலை கிராமங்களில் அதிக அளவில் பயிராகும் அன்னாசிபழத்தை பாதுகாத்து, பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தாதது விவசாயிகளின் குறையாக உள்ளது. கிராம்பு, நல்லமிளகு உட்பட மலைப்பயிர்களின் தரத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் மலைப்பயிர் ஆராய்ச்சி மையம் தொடங்குவது இழுத்தடிக்கப்படுகிறது.

அரசு வேளாண் கல்லூரி அமையாதது போன்ற பத்மநாபபுரம் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கடந்த 3 தேர்தல்களில் இத்தொகுதியில் வென்ற திமுக நிறைவேற்றவில்லை.

திமுக, அதிமுக நேரடி மோதலுக்கு மத்தியில்5 முதல் 10 சதவீதம் வாக்குகளை அமமுக, நாம்தமிழர், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் பிரிப்பதற்கான வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட இலைக்கு, இத்தேர்தலில் தாமரையின் ஆதரவும் இருப்பதால் இந்துக்கள் கணிசமாக உள்ள பத்மநாபபுரம் தொகுதியை மீண்டும் தக்க வைப்பது திமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x