

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் டார்ச் லைட் சின்னத்தில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து, ஆம்பூர் புறவழிச்சாலையில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும் போது, ‘‘எங்களுடைய வேட்பாளர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள். பணமில்லா அரசியல் எங்களுடையது, மக்களை நம்பி மக்களுக்காக சேவை செய்பவர்கள் வந்தால் தான் தமிழகம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் நாங்கள் நிற்கும் தொகுதிகளில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள், பாமரர்கள், உழைப்பாளிகளையும், மக்களுக்காக சேவை செய்பவர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்து நிறுத்தியுள்ளோம். எங்கள் கூட்டணி நல்லவர்களும், வல்லவர்களும் ஒன்றிணைந்த கூட்டணி.
கடந்த 53 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன. ஆனால், தமிழக மக்கள் வாழ்க்கை தரம், பொருளாதார நிலை உயரவில்லை. பொருளாதார நிலை உயர்ந்திருந்தால் வாக்குக்கு பணம் வழங்கும் நிலை வந்திருக்காது. தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்புகளை கூடுதலாக உருவாக்காமல், வாக்குக்கு பணம் கொடுத்து, கொடுத்து மக்களை தங்கள் பக்கமே வைத்திருப்பவர் கள் திராவிட இயக்கங்கள்.
தமிழகத்தில் புதிய சக்தி உருவாக்கப்பட வேண்டும். தற்போது, இல்லையென்றால் எப்போதும் இல்லாமல் போகும் நிலை வந்துவிடும். அதனால், புதிய சக்தியை உருவாக்க வாக்காளர்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும், வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற மக்கள் ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.