தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த தலையாட்டி பொம்மைகளை வீழ்த்துவோம்: மதுரை பிரச்சாரத்தில் தமிழில் பேசிய பிருந்தா காரத்

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த தலையாட்டி பொம்மைகளை வீழ்த்துவோம்: மதுரை பிரச்சாரத்தில் தமிழில் பேசிய பிருந்தா காரத்
Updated on
2 min read

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த ’தலையாட்டி பொம்மைகளை வீழ்த்துவோம்’ (தமிழில் சொன்னார்) என்று மதுரை பிரச்சாரத்தில் பேசிய பிருந்தா காரத் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை டி.எம்.கோர்ட் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மதுரை நகரில் போட்டியிடும் திமுக, மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசுகையில்,

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் ஊழல் அதிமுக ஆட்சி அகற்றப்படும். அதிமுக ஆட்சியில் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

தமிழக தேர்தல் முடிவு மாநில எல்லையைத் தாண்டி எதிரொலிக்கும். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களின் பேச்சைக் கேட்கவில்லை. மத்திய அரசின் பேச்சை மட்டும்தான் கேட்டார்கள்.

இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் தலையாட்டி பொம்மைகளாக (தலையாட்டி பொம்மை என்ற வார்த்தையை தமிழிலேயே சொன்னார்) இருக்கிறார்கள். வேளாண் சட்டத்தை எதிர்த்து 4 மாதங்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவில்லை. பாஜகவின் குரலைத்தான் பிரதிபலித்தது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக ஆட்சி தலையாட்டி பொம்மை அரசாக (மீண்டும் மீண்டும் இந்த வார்த்தையை தமிழிலேயே சொன்னார்) உள்ளது.

கரோனா காலத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தது மோடி அரசு. இந்த காலத்தை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தனர். பொதுமக்கள் உழைப்பைப் பயன்படுத்தி உருவான பொதுத்துறை நிறுவனங்களை விற்று நாட்டின் முதுகெலும்பை உடைக்கிறார்கள். இதற்கு தலையாட்டி பொம்மை அதிமுக அரசு ஆதரவளிக்கிறது. இந்த அரசை அகற்ற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கென்று மகத்தான பாரம்பரியம் உண்டு. சமுகநீதி, கூட்டாட்சி தத்துவத்துக்காக போராடிய மாநிலம் இது. புதிய கல்வி கொள்கையை எதிர்த்தும் தமிழகம் போராடியது.

இப்போது இன்னொரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறேன். மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 19ந் தேதி மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்தச் சுற்றறிக்கையில் மத்திய அரசு அலுவலங்களில் 55% கடித போக்குவரத்து இனி இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

எனக்கு இது எப்படி தெரியும் என்றால், மேற்கு வங்கத்திற்கு வந்த கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு அதனை இதுவரையில் எதிர்க்கவும் இல்லை, இந்தக் கடிதம் வந்தது பற்றி வெளியே சொல்லவும் இல்லை.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 8வது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் திருவள்ளுவர் காவி மயமாக்கப்பட்டுள்ளார். இது சிறிய விஷயம் அல்ல. மதச்சார்பற்ற இந்த மாநிலத்தை மதவெறியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

பொருளாதாரம், கலச்சாரம், விவசாயம் என்று அனைத்து துறைகளிலும் மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரள்கிறார்கள். எனவே, மக்களிடையே மதபிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் கூட போபாலில் ரயிலில் சென்ற கிறிஸ்தவர்களை சங் பரிவார்கள் தாக்கியிருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தையே காவி மயமாக்கப் பார்க்கிறார்கள். இந்தத் தேர்தல் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. கூடவே, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த தலையாட்டி பொம்மைகளை வீழ்த்த வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

எனவே, இங்கே மேடையில் இருக்கிற மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in