

தேர்தல் பாதுகாப்புப் பணியில் புதுச்சேரி முழுக்க 40 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை பணியமர்த்தப்பட உள்ளது. கரோனா பரவலால் புதுச்சேரி மாநிலத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1558 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பரவலால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர் என்ற அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1558 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி 952 முதன்மை வாக்குச்சாவடிகளும், 606 துணை வாக்குச்சாவடிகளும்என வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் 1217 வாக்குச்சாவடிகளும், காரைக்காலில் 234 வாக்குச்சாவடிகளும், மாஹேயில் 47ம், ஏனாமில் 60ம் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வாக்குச்சாவடிகளை ஒளிப்பதிவுகளாக உயர் அதிகாரிகள் கண்காணிக்கும் வசதி உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 330 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை. அதில் புதுச்சேரியில் 278ம், காரைக்காலில் 30ம், மாஹேயில் 8ம், ஏனாமில் 14ம் உள்ளன. இங்கு கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும்.
கரோனாவையொட்டி வாக்குப்பதிவு முந்தைய நாள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கப்படும். வாக்காளர்களுக்கு சானிடைசர்கள் தரப்படும். வைக்காளர்களுக்கு ஒரு கையுறை தரப்படும். உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். முககவசம் அணிந்து வருவது உறுதி செய்யப்படும். வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் கையுறை, மருத்துவகழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வாக்காளர் தகவல் சீட்டு விரைவில் தரவுள்ளோம். வீடு, வீடாக சென்று இச்சீட்டு தரப்படும். வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி முகவரி ஆகியவை இடம் பெறும் வரும் 31ம் தேதிக்குள் இப்பணி முடிவடையும். இச்சீட்டானது வாக்காளர் அடையாளத்தை நிருபிக்கும் ஆவணமாக பயன்படுத்த இயலாது.
வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே வாக்களிக்க வரும் பொது கொண்டு வரவேண்டிய சரியான ஆவணமாகும். அந்த அட்டை இல்லாத போது, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உட்பட 11 வகை ஆவணங்களையும் பயன்படுத்தலாம்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 40 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் புதுச்சேரி முழுக்க பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு தினம், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியில் போலீஸாருடன் இணைந்து பணியாற்றுவர்" என்று தெரிவித்துள்ளார்.