

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் ஆலந்தூர் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரித்தார். இது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
தேர்தல் காலம் என்பதால் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் பொதுமக்களை கவரவும் வாக்குகளை சேகரிக்கவும் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் தா.மோ அன்பரசன் இன்று தொகுதிக்குட்பட்ட கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை ஆகிய கிராம ஊராட்சிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மாட்டு வண்டியில் வந்து வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவர் மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் கைகளை அசைத்தபடி ஆரவாரத்துடனும் ரசித்தனர்.
அப்போது வேட்பாளர் தாமோ.அன்பரசன் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையைக் குறைக்காமல் இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால், விலைவாசி விண்ணைத் தொடுகிறது. ஆட்சிக்கு வந்ததும் டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் வசதி படைத்தவர்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்தும் பொதுமக்களுக்கு உணர்த்தவும் இவ்வாறு மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்கிறேன்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் இவ்வாறு அவர் பிரச்சாரத்தில் போது தெரிவித்தார்.