Published : 26 Mar 2021 09:13 PM
Last Updated : 26 Mar 2021 09:13 PM

நான் பேஸ்புக்கில் அரசியல் செய்யவில்லை; மதுரைக்கு கொண்டு வந்த திட்டங்களைப் பாருங்கள்: பொதுமக்களிடம் ஆதங்கப்படும் அதிமுக வேட்பாளரான முன்னாள் எம்பி

மதுரை 

கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் எந்தச் சர்சையிலும், ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காத அப்போதைய எம்.பி கோபாலகிருஷ்ணனுக்கு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்த்து இந்தத் தொகுதியில் திமுக சார்பில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி போட்டியிடுகிறார். மூர்த்தி எம்எல்ஏ-தான் கடந்த மக்களவை த்தேர்தலில் தற்போதைய மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.

மூர்த்தி, தற்போது தான் போட்டியிடும் கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில், ‘‘கோபாலகிருஷ்ணன் எம்.பி.,யாக இருந்தபோது உங்க வீட்டு காது குத்து, கல்யாணத்திற்கு வந்தாரா? எம்.பியாக இருந்தபோது அவரை இந்தத் தொகுதியில் என்றாவது நீங்கள் பார்த்தது உண்டா?, என்று கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்தார்.

மூர்த்தி எம்எல்ஏவின் இந்தப் பிரச்சாரத்தால் அதிருப்தியடைந்த கோபாலகிருஷ்ணன், 2 நாட்களுக்கு முன் தொகுதிக்குட்பட்ட ஊமச்சிக்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது அங்குள்ள பொதுமக்களிடம் உருக்கமாகவும், ஆதங்கப்பட்டும் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் அவர், ‘‘கல்யாணத்திற்கும், காதுகுத்துக்கும் வரல என்பதை குற்றச்சாட்டாகச் சொன்னால் அவருக்கு அறிவின்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார். அந்த குற்றச்சாட்டை தயவு செய்து ஊக்குவிக்காதீர்கள்.

சரி இவர் (மூர்த்தி எம்எல்ஏ) ஜெயிக்க வைத்த தற்போதைய மதுரை எம்பி சு.வெங்கடேசன் வந்து 2 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை என்ன திட்டம் கொண்டு வந்தார், எத்தனை நாள் உங்களை வந்து பார்த்தார். பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மட்டும் வந்தால் போதுமா? இப்போது இந்த இடத்திலே உங்கள் கண்ணு முன்னால நடக்கிற வந்த ரூ.2000 கோடி நத்தம் பறக்கும் மேம்பாலம் வேலை நடப்பதைப் பாருங்கள்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசி இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். இப்படி நான் ஆதாரபூர்வமாக சொல்கிறேன். இதுபோல், ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘எய்ம்ஸ்’ என்னோட முயற்சியில் வந்தது. கூகுளில் என்னோட பெயரைப் போட்டு தேடிப்பாருங்கள். நான் மதுரைக்கு என்னனென்ன செய்தேன். அதன் அரசு ஆணைகள் வரும். மக்களை நெஞ்சுரத்தோட வந்து சந்க்கிறேன். என்னை எம்எல்ஏ ஆக்கி பாருங்கள். நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள். நான் அரசியலுக்கு சம்பாதிக்கவரவில்லை. குத்தகை எடுக்க மாட்டேன்.

கண்மாயில் மண் அள்ள மாட்டேன். பதவியை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வந்த தொழில் அதிபர் இல்லை. விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். இன்றும் விவசாயம் செய்கிறேன். நான் உங்களில் ஒருவன். என்னை நம்புங்கள். வெறும் வாய்பேச்சுக்கு சொல்லவில்லைல. நான் எனக்குதான் ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லவில்லை. மனதிற்கு பட்டவருக்குப் போடுங்கள்.

ஆனால், நான் கொண்டு வந்த திட்டங்களை யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்கிற தவறு அடுத்த 5 ஆண்டு உங்களைத் தண்டிக்கும். நீங்கள் செய்கிற நன்மை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு பலன் தரும். தவறா, சரியாக என்று உங்கள் மனசாட்சிப்படி யோசியுங்கள். நான் மதுரைக்கு கொண்டு வந்த பாலத்தைப் பாருங்கள். ரோட்டைப் பாருங்கள். கல்யாணத்திற்கும், காதுகுத்துக்கும் வரவில்லை என்று நினைக்காதீர்கள். நன்றியுள்ளவனாக இருப்பதைப் பாருங்கள், ’’ என்றார்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘மக்களவையில் 87 சதவீதம் வருகைப்பதிவேடு உள்ளது. 28 விவதாங்களில் பங்கேற்றுள்ளேன். 473 கேள்விகள் கேட்டுள்ளேன். தொகுதி சம்பந்தப்பட்ட 165 விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளேன். தற்போதைய எம்.பி.யை போல் ‘பேஸ்புக்’கில் அரசியல் செய்யவில்லை, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x