

பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சைகை மூலம் வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். அவரைக் கண்ட தொண்டர்கள் கூச்சலிட்டும், ஆர்ப்பரித்தும் முழக்கமிட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை.
இதேபோல அவருடைய மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை. விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று மாலை (26ம்தேதி) பழைய பல்லாவரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு, பல்லாவரம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அனகை முருகேசனை ஆதரித்து தொண்டர்களை பார்த்து கையசைத்தும், கட்டை விரலை உயர்த்தி காட்டியும், கையெடுத்து கும்பிட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜயகாந்தைப் பார்த்ததும், கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் உற்சாகமாகக் கைகளை அசைத்து கரகோஷம் எழுப்பி, அவரை பேசுமாறு அழைத்தனர்.
ஆனால் அவர் எதுவும் பேசாமல் தொடர்ந்து கைகளை மட்டுமே அசைத்து விட்டு, அங்கிருந்து சிறிது நேரத்திலேயே புறப்பட்டுச் சென்றார்.
விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தாலும், அவரின் உடல்நிலையைப் பார்த்து பலரும் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து தொண்டர்கள் சிலர்,"சினிமாவில் மக்களுக்காக நல்ல கருத்துகளை விதைத்த விஜயகாந்த், சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார். சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் நல்லது செய்த ஒரே தலைவர் எம்ஜிஆர். அதற்குப்பிறகு விஜயகாந்த்தான்.
அவரின் சிங்க கர்ஜனைக் குரலைக் கேட்க நாங்கள் ஓடோடி வந்தோம். ஆனால், தலைவரின் உடல்நிலை பிரச்சினையால் பேசமுடியாமல் போனது. அவர் கை மட்டுமே அசைத்தது எங்கள் நெஞ்சு வெடிக்கும் வகையில் இருந்தது. அவரின் குரலைக் கேட்க முடியவில்லை என்றாலும் அவர் முகத்தைப் பார்த்தது எங்களுக்குப் பேரானந்தம். ஆனால், அவர் குரலை கேட்க முடியாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் பேசவில்லை என்றாலும் அவர் எண்ணம், செயல், கையை அசைத்து என்ன சொல்லவருகிறார் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். திமுகவையும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற அவர் எண்ணத்தை நாங்கள் பிரதிபலிப்போம்" என்றனர்.