காளையார்கோவில் அருகே ராணுவவீரர் தாய், மனைவியை கொன்றுவிட்டு 58 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கு: 9 மாதங்களுக்கப் பிறகு 6 பேர் கைது

காளையார்கோவில் அருகே ராணுவவீரர் தாய், மனைவியை கொன்றுவிட்டு 58 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கு: 9 மாதங்களுக்கப் பிறகு 6 பேர் கைது
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவவீரரின் தாய், மனைவியைக் கொன்றுவிட்டு 58 பவுன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை 9 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.

காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவவீரர் ஸ்டீபன் (32). அவர் லடாக் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தையும், ஓய்வு பெற்ற ராணுவவீரருமான சந்தியாகு (66). தாயார் ராஜகுமாரி (61), மனைவி சினேகா (30), அவரது 6 மாத பெண் குழந்தையுடன் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 13 இரவு சந்தியாகு அருகேயுள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டார். வீட்டிற்குள் சினேகாவும், குழந்தையும் தூங்கினர். வரண்டாவில் ராஜகுமாரி தூங்கினார்.

கதவை வெளிப்புறமாக பூட்டி சாவியை தலையனைக்கு கீழே வைத்திருந்தார். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த கொள்ளையர்கள் ராஜகுமாரியை ஆணி வைத்த இரும்பு கபியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் சினேகாவை படுக்கையிலேயே கம்பியால் தாக்கி கொன்றனர். ஆனால் குழந்தையை எதுவும் செய்யவில்லை. அதன்பிறகு இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 58 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் இந்த வழக்கில் சிசிடிவி, விரல்ரேகை என ஆதாரங்களும் சிக்காததால் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திசிதம்பரம் எம்பி பாராளுமன்றத்தில் குற்றவாளிகளை பிடிக்க வலியுறுத்தி பேசினார். இதையடுத்து முதல்வர் பழனிசாமி உத்தரவில், விசாரணை தீவிரமடைந்தது.

இதையடுத்து போலீஸார் பழைய குற்றவழக்குகளை ஆய்வு செய்ததில் கம்பியால் தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து தகவல் கிடைத்தது.

அதன்பிறகு குற்றவாளிகள் பயன்படுத்திய மொபைல் சிக்னல் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துமுருகன், தேனி மாவட்டம் அரண்மனைபுதூரைச் சேர்ந்த செல்லமுத்து, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த பூச்சிக்கண்ணன், காளையார்கோவில் அருகே பெரியகண்ணனூரைச் சேர்ந்த வேணுகோபால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராஜகோபாலகிருஷ்ணன், முகேஷ்ராஜா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘ முத்துமுருகன், பூச்சிக்கண்ணன், செல்லமுத்து ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர்கள் அனைவரும் சிறையில் இருந்தபோது நண்பர்களாகின்றனர்.

அவர்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை வேணுகோபால் மூலம் நோட்டமிட்டுள்ளனர்.

வேணுகோபால் கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவத்தன்று 6 பேரும் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் முடுக்கூரணிச் சென்று இருவரையும் கொலை செய்து கொள்ளையடித்துள்ளனர். ஆட்டோவை முகேஷ்ராஜா ஓட்டியுள்ளார்,’ என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in