கரோனா 2-வது அலை பரவல்: தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கரோனா 2-வது அலை பரவல்: தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குப்பதிவின் போதும், கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, ஏற்கெனவே ஒரு வழக்கில், தேர்தலின் போது கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

தற்போது இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அது அவர்களின் கடமை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

வாக்குப்பதிவு தினத்தில், வாக்காளர்களை வரிசையில் நிற்க வைக்கும் போதும், கரோனா தடுப்பு வழிகளை தேர்தல் ஆணையம் மனதில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

ஊடகங்கள் வாயிலாக இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தொற்று பரவல் மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in