Published : 26 Mar 2021 02:03 PM
Last Updated : 26 Mar 2021 02:03 PM

எந்த மதத்துக்கும் திமுக எதிரானது அல்ல; அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாப்பதே எங்கள் கடமை: ஸ்டாலின் பேச்சு

தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின்.

திருச்சி

எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல திமுக என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26), தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களிடையே உரையாற்றியதாவது:

"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள் நாங்கள். அந்த கொள்கையின் அடிப்படையில், 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற குறிக்கோளைக் கொண்டு திமுக அரசிலும், அரசுக்கு வெளியில் இருந்தாலும் இயங்குபவர்கள் நாங்கள்.

எனவே, எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல திமுக என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையிலேயே சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்து பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாத்திடுவதே திமுகவின் கடமை. அதன்படியேதான் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகும் கடைப்பிடிப்போம்.

என்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதைப் பற்றி சொல்லும் ஆற்றல் பாஜக, அதிமுகவுக்கு இல்லை. காரணம் எதுவும் செய்யவில்லை.

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

மோடி முதன்முதலாக பிரதமராக வந்த நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார். கொடுத்தாரா? வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். கொடுத்தாரா? விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டிருக்கிறதா?

எல்லோருக்கும் செல்போன் இலவசமாகக் கொடுப்பேன் என்று அதிமுக சொன்னது. கொடுத்தார்களா? பால் விலை லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள். தந்தார்களா?

அந்த இரண்டு பேரும் ஜோடி போட்டுக்கொண்டு இந்தத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரும் ஆறாம் தேதி இந்த நாட்டை விட்டு விரட்டும் வகையில் திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

2016-ல் ஜெயலலிதா இறந்தார். அப்போதிலிருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதில்தான் அவர்களுடைய கவனம் இருக்கிறதே தவிர மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

சமீபத்தில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சசிகலாவை சமாதானம் செய்ய பாஜக எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் பிரச்சினைகள் வரும். எனவே, அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சிறப்புப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் சசிகலாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், முதல்வர் பழனிசாமி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று பேசியிருக்கிறார்.

இதைப் பார்க்கும்போது இன்றைக்கும் அந்தக் கட்சியில் கோஷ்டி சண்டை தொடர்ந்து கொண்டிருப்பது புரிகிறது. எனவே மக்களைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரையில் ஒரு செய்தியும் வரவில்லை. அந்த மர்ம மரணத்தைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கிறதா? இல்லை.

எனவே, ஜெயலலிதா கொடுத்துவிட்டுச் சென்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறார்களா? இல்லை. தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மத்தியில் இருக்கும் பாஜகவிடம் அடிமையாக இருந்து, நம்முடைய உரிமைகளைப் பறிகொடுத்து இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் அல்ல.

அது நீட்டாக இருந்தாலும் சரி, உதய் திட்டமாக இருந்தாலும் சரி, உணவுப் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, ஜிஎஸ்டி வரியாக இருந்தாலும் சரி, பறிகொடுத்த உரிமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, மக்களை மறந்து இருக்கும் அவர்களை நீங்கள் மறக்க வேண்டும். இதற்கெல்லாம் சரியான பாடத்தை வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில் புகட்ட வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x