

தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த உத்தரவிடமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜி.பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பு இருந்ததுபோல் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை. இந்தத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்துவது இயலாத காரியம் என்பதால் அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வாக்குச்சீட்டை அறிமுகப்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இதே கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கப்பட்ட பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வாய்ப்பில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்வு கண்டுள்ள ஒரு விவகாரத்தை மீண்டும் விசாரித்து மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற காரணத்தால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பார்த்திபனின் வழக்கை முடித்துவைத்தனர்.