Published : 26 Mar 2021 01:55 PM
Last Updated : 26 Mar 2021 01:55 PM

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும்: திருமாவளவன்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கை:

"இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 54 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளைச் சார்ந்த 54 மீனவர்களை நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் அனைவரும் இப்பொழுது 3 தீவுகளில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களைக் கைது செய்வதும் அவர்களது படகுகளைச் சேதப்படுத்துவதும் இலங்கைக் கடற்படைக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. இதைப் பற்றி இந்திய அரசு பாராமுகமாக இருப்பதாலும், தமிழக அரசும் இது தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் மத்திய அரசுக்குக் கொடுக்காமல் அலட்சியம் செய்வதாலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவருகிறது.

இலங்கையில் இருக்கும் மேற்கு சரக்கு முனையத்தை (Western Cotainer Terminal ) அதானி குழுமத்துக்குப் பெற்றுத் தருவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரையும், இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மோடி அரசு, தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்படும்போதும், அவர்கள் கைது செய்யப்படும்போதும் அத்தகைய அக்கறையைக் காட்டுவதில்லை.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குத் தமிழக மீனவர்களின் உயிரைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை. அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டுள்ள அதிமுகவும் இதைப் பற்றி வாய் திறக்காமல் மவுனம் காக்கிறது.

சில நாட்களுக்கு முன் ஐநா மனித உரிமை கவுன்சிலில் மோடி அரசு இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவு அளித்ததையும், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்ததையும் பார்க்கும்போது இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறதா? தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். தேசபக்தி பற்றி வாய் வலிக்கப் பேசும் பாஜகவினர் இன்றைக்கு மிகப் பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சியில் இருக்கும் நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

இந்திய இறையாண்மை மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் உடனடியாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலமே தமிழக மீனவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x