

கரூர் மாவட்டம் குளித்தலையில் நண்பகல் வெயிலில் நடந்து சென்று திமுக வேட்பாளர், முன்னாள் எம்எல்ஏ ரா.மாணிக்கத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் இன்று (மார்ச் 26) மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக, திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கரூருக்கு வந்த ஸ்டாலின், கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே அவரது வாகனத்தில் இருந்து இறங்கி, திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ ரா.மாணிக்கத்தை ஆதரித்து நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.
நண்பகல் நேரத்தில் குளித்தலை பேருந்து நிலையம் அருகிலிருந்து குளித்தலை சுங்கவாயில் வரை சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற ஸ்டாலின், வழியில் பேருந்தில் இருந்த பயணிகள், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள், நடந்து சென்றுவர்களிடம் கை குலுக்கியும், வணங்கியும் வாக்குச் சேகரித்தார். சிலர் அவர் காலில் விழுந்தும் வணங்கினர்.
எதிர்பாராதவிதமாக ஸ்டாலினை நேரில் பார்த்தவர்கள் மற்றும் அவரிடம் கை குலுக்கியவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு, குளித்தலை சுங்கவாயிலில் இருந்து வாகனத்தில் கரூருக்கு ஸ்டாலின் புறப்பட்டார்.