

தேர்தல் களத்தில் எதிரிகள் தோல்வி பயத்தில் உள்ளனர். கூடுதலாக உழைத்தால் வரலாறு காணாத வெற்றியை அடையலாம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது.
தேர்தல் களத்தில் திமுக அணி வலுவாக உள்ளதாகவும், மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெறும் என்றும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் ஒருமித்த பிரச்சாரம் என்பது இல்லாதது போன்ற தோற்றம் நிலவுகிறது. சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்து அதிமுக தலைமையில் உள்ளவர்களுக்கு இரண்டு கருத்துகள் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
தேர்தல் களத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். மறுபுறம் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் போட்டியினூடே தொண்டர்களை உற்சாகப்படுத்த கடந்த வாரம் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். வெற்றி பெறுவோம் என்கிற மிதப்பில் இருந்து வெற்றியைக் கோட்டைவிட்டு விடக்கூடாது என 2016-ம் ஆண்டு அனுபவத்தைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.
இதேபோல் இன்றும் தொண்டர்களுக்கு முகநூல் மூலம் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் கூடுதலாக உற்சாகத்துடன் உழைத்தால் வரலாறு காணாத வெற்றியை அடையலாம் என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“களத்தில் தோல்வி பயத்தில் எதிரிகள்; நாம் இன்னமும் உற்சாகத்தோடும் பலத்தோடும் வேகத்தோடும் எதிர்ப்போம்; தமிழகத்தின் தேர்தல் வரலாறு இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பெறுவோம்.
அண்ணாவின், தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான எனது அன்பு வேண்டுகோள்”.
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.