Last Updated : 26 Mar, 2021 12:42 PM

 

Published : 26 Mar 2021 12:42 PM
Last Updated : 26 Mar 2021 12:42 PM

திருச்சியில் தாமதமாகத் தொடங்கிய அஞ்சல் வாக்குப் பதிவு

திருச்சி மாவட்டத்தில் முதல்கட்ட அஞ்சல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய நிலையில், ஒன்றரை மணி நேரம் கழித்து காலை 11.35 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 18 ஆயிரத்து 800 பேரில், 14 ஆயிரத்து 300 பேர் அஞ்சல் வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,800 பேர், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பிற மாவட்டத்தினர். இவர்களுக்கான அஞ்சல் வாக்கு சீட்டுகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 6,800 பேரின் இல்லத்துக்கே சென்று அஞ்சல் வாக்கைச் சேகரிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள், கணக்கீட்டுக் குழு, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, வீடியோ பார்வைக் குழு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளவர்கள், நோடல் அலுவலர் வருவாய்த் துறையினர் 744 பேர் இன்று (மார்ச் 26) தங்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11 மணிக்கு மேலாகியும் அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கவில்லை.

இதுகுறித்துக் கேட்டபோது, "அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் வந்த பிறகு அவர்கள் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குப்பதிவைத் தொடங்க முடியும்" என்று அலுவலர்கள் கூறினர்.

ஆனால், "தேர்தல் அலுவலர்களின் தாமத வருகையாலேயே அஞ்சல் வாக்குப் பதிவு தாமதம் ஆகிறது" என்று வேட்பாளர்களின் முகவர்கள் கூறினர்.

இதேபோல், அஞ்சல் வாக்கைச் செலுத்த வந்த அரசு ஊழியர்கள் கூறும்போது, "அரை மணி நேரத்துக்கும் மேலாக அஞ்சல் வாக்குப்பதிவு மையத்திலேயே காத்திருக்கிறோம். ஆனால், அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கவில்லை" என்றும் கூறினர்.

தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் மேற்பார்வையில், அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு, காலை 11.35 மணிக்கு அஞ்சல் வாக்குப் பதிவு தொடங்கியது.

இதனிடையே, 80 வயதைக் கடந்த மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே சென்று அஞ்சல் வாக்கைச் சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகத் தேர்தல் அலுவலர்கள் கூறினர்.

கரோனா தடுப்பூசி

அஞ்சல் வாக்கு செலுத்த வரும் அலுவலர்களில் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மற்றும் 2-ம் கட்டத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்களுக்காக அஞ்சல் வாக்குப் பதிவு மைய வளாகத்தில் சுகாதாரத் துறையினர் மூலம் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x