

கலப்புத் திருமணத்துக்கு நிதியுதவியை உயர்த்தி வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டதைத் திரித்து, திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் ஒரு பெண் பேசி வெளியிட்ட காணொலி குறித்து திமுக அளித்த புகாரில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் காணொலியை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“அண்ணாவால் 1967-ல் தொடங்கப்பட்ட கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பல்வேறு காலங்களில் அனைத்து அரசுகளாலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது “கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்துகொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கக் காசும் வழங்கப்படும்” என்று திமுகவின் 2021-தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்பதை அறிந்த மாற்று அணியினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு பெண்மணி, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சில குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்தால், நிதியுதவி அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரச்சாரத்தைச் செய்துள்ளார். அந்தக் காணொலியைச் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
அந்தக் காணொலியில், பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டும் விதமாகவும் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்ப் பிரச்சாரக் காணொலியைத் தடை செய்ய வேண்டும். மேலும், அதற்குக் காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.
இதனை ஆராய்ந்த மாநிலத் தேர்தல் அதிகாரி, “அந்தக் காணொலிக்குக் காரணமானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A-ன் கீழ் வழக்குப் பதிவு செய்திட” தமிழக காவல்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மாநிலத் தேர்தல் அதிகாரி மற்றொரு கடிதத்தின் மூலமாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளருக்கு (Under Secretary) இந்தக் காணொலியை அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நீக்கி ஆவன செய்திடப் பரிந்துரை செய்துள்ளார்”.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.