

மதுரையில் திமுக, அதிமுக கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் வேட்பாளர்களாகிவிட்டதால் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ளனர். இதனால், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள், நிர்வாகிகளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட அதிமுகவில், மாநகரம், புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு மாவட்டங்கள் உ்ளளன. இதில், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் முடங்கியதால் இவரது மாவட்டத்திற்குட்பட்ட மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் திண்டாடுகிறார். பெரும்பாலான இடங்களுக்கு முக்கிய நிர்வாகிகள் இல்லாமலே ஆதரவாளர்களுடன் சென்று கோபாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்கிறார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கட்சி மேலிடத்திற்கு தகவல் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனால், விவி.ராஜன் செல்லப்பா, தற்போது அவ்வப்போது வந்து நிர்வாகிகளிடம் கோபாலகிருஷ்ணனும் செல்லுமாறு கூறிச் செல்கிறார்.
ஆனாலும், ராஜன் செல்லப்பாவுக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும், கட்சியில் இணக்கமான உறவு இல்லாததால் தேர்தல் பிரச்சாரத்தல் இருவருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை.
அதுபோல், வருவாய்த்துறை அமைச்சரும், புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் தொகுதியிலே முடங்கிவிட்டதால் அவரது மாவட்டத்திற்குட்பட்ட மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பிரச்சாரப்பணிகளை அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை.
இதேபோல், மாநகரச்செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மேற்கு தொகுதியிலே முடங்கியதால் வடக்கு, தெற்கு, மத்திய தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
அதுபோல், திமுகவில் மாநகர தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, தனது மாவட்டத்தில் ‘சீட்’ கிடைக்காமல் மாநகர வடக்கு மாவட்டத்தில் உள்ள வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். வேறு மாவட்டத் தொகுதியில் போட்டியிடுவதால் தன்னுடைய மாவட்டத் தொகுதிகளில் இவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், இவரது மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடைய தேர்தல் பணிகளில் இவரால் கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால், இவர் மாவட்டச் செயலாளராக உள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திமுக வேட்பாளர் சின்னம்மாள் திணறிக் கொண்டிருக்கிறார்.