Last Updated : 26 Mar, 2021 05:49 AM

 

Published : 26 Mar 2021 05:49 AM
Last Updated : 26 Mar 2021 05:49 AM

விஐபி தொகுதி: கோவை தெற்கு - மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

கோவை மாநகரை முழுமையாக மையப்படுத்தி அமைந்துள்ள கோவை தெற்கு தொகுதி, கடந்த 2007-ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில் அதிகம் உள்ளன. பழமை வாய்ந்த கோவை கோனியம்மன் கோயில், 130 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ‘விக்டோரியா’ அரங்கம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகைப்பட்டறைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், முக்கிய காய்கறி மார்க்கெட்டுகள் இத்தொகுதியில் உள்ளன. விஸ்வகர்மா, செட்டியார் சமூக மக்கள், பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

கவுண்டர், தேவர், ஜெயின் சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர். உக்கடம், கோட்டைமேடு, ஜி.எம்.நகர், வின்சென்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர். வேட்பாளரின் வெற்றி, தோல்வியில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். பெரும்பான்மையாக நடுத்தர மக்கள் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.

இத்தொகுதியில் திமுக-அதிமுக நேரடியாக மோதவில்லை. காங்கிரஸின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி அப்துல்வகாப், அமமுகவின் அமைப்புச் செயலாளர் சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி ஆகியோர் இங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்.

தொகுதியின் முக்கியப் பிரச்சினைகள்

முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. டவுன்ஹாலில் பல அடுக்கு வாகனம் நிறுத்தகம் கட்டும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், உக்கடத்தில் கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் கட்டும் திட்டம் கிடப்பில் உள்ளன. தங்கநகைத் தொழிலாளர்களுக்கு ‘ஜூவல்லரி பார்க்’ மற்றும் தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. வாலாங்குளம், பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாமல் உள்ளது. ‘வஉசி உயிரியல் பூங்கா’ மேம்
படுத்தும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

வளர்ச்சிப் பணிகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் வாலாங்குளம், பெரியகுளம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்தி பொழுது போக்கு மையம் ஏற்படுத்தியது, அரசு மகளிர் கல்லூரி ஏற்படுத்தியது, தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் மற்றும் மருத்துவச் சேவையை மேம்படுத்தியது, ரயில் நிலையம் சாலையில் போலீஸ் மியூசியம் ஏற்படுத்தியது, நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் கட்டியது, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை, கோவை - திருச்சி சாலை சுங்கம் அருகே மேம்பாலம் கட்டி வருவது முக்கிய வளர்ச்சித் திட்டப்பணிகளாகும்.

ம.நீ.ம பலம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல் தேர்தலை இத்தொகுதியில் எதிர்கொள்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம், மக்கள் நீதி மய்யத்துக்கான கணிசமான வாக்கு வங்கி இத்தொகுதியில் பரவலாக உள்ளது. படித்த இளைஞர்களின் வாக்கு தனக்கு அதிகம் கிடைக்கும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாததால், அக்கட்சிகளின் வாக்குகளையும் மநீம குறி வைத்துள்ளது. பாஜக மீது எதிர்ப்பாக உள்ள அதிமுகவினரின் வாக்குகள், காங்கிரஸின் மீது எதிர்ப்பாக உள்ள திமுகவினரின் வாக்குகள், இளைஞர்கள், இளம் பெண்கள், புதிய மாற்றத்தை எதிர்நோக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகள் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் என்று தொகுதி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ம.நீ.ம பலவீனம்

அக்கட்சிக்கு இது முதல் பேரவைத் தேர்தல், அதிக வாக்கு வங்கிகளை கொண்ட இரண்டு மாநில கட்சிகளை பின்புலமாகக் கொண்டு களமிறங்கியுள்ள 2 தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவது, திராவிட கட்சிகளுக்கு நிகராக கீழ்மட்ட அளவுக்கு இறங்கி மக்களிடம் முழுமையாக வாக்கு சேகரிக்க முடியாதது மநீமவுக்கு பின்னடைவே. கமல்ஹாசன் வென்றால், மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியாது, அவர் சினிமாவுக்கு சென்றுவிடுவார், மக்களின் கோரிக்கைகள் நிறை
வேறாது என்ற எதிர்கட்சியினரின் பிரச்சாரம், கமல்ஹாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

அதிமுக, பாஜக பலம்

2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த இரு பேரவைத் தேர்தல்களிலும் இங்கு அதிமுக வென்றுள்ளது. இம்முறை தொகுதி, அதிமுக கூட்
டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.இங்கு பாஜக கூட்டணியில் உள்ள வானதி சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். ‘‘கடந்த முறை தனித்து போட்டியிட்டே அதிக வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இம்முறை அதிமுக கூட்டணியில் உள்ளதால் வெற்றி நிச்சயம்’’ என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உறுதியாக நம்புகிறார். அதற்கேற்ப, வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு, முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவிட்டு, கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியாக இருந்தாலும், கோவையைச் சேர்ந்தவர், எல்லோரிடமும் பாகுபாடு காட்டாமல் எளிமையாக பழகக்கூடியவர், தொகுதி மக்களிடம் முன்னரே அறிமுகமானவர், கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியை மையப்படுத்தி அவர் மேற்கொண்டு வந்த பணிகள் உள்ளிட்டவை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு சாதகமான அம்சமாக உள்ளது.

அதிமுக, பாஜகவின் பலவீனம்

2 முறை அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு கொடுத்தும், தங்களது தொழிலை மேம்படுத்த அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்ற கோபம், தங்க நகைப்பட்டறையாளர்களிடம் உள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை இல்லாதது, இழுபறியாக நடந்து கொண்டு இருக்கும் மேம்பாலப் பணிகள் போன்றவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு, இத்தொகுதியில் 92 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 46,368 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஓட்டுகள் குறைந்தன. பாஜக மீதான பொதுவான எதிர்ப்பால் இவ்வாக்குகள் குறைந்ததாக பார்க்கப்படுகின்றன. இது பேரவைத் தேர்தலில் தொடரும் என எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

திமுக, காங் பலம்

தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கடந்த முறை தோல்வியடைந்தாலும், இம்முறை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளார். திமுக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் உள்ளதாலும், மத்திய அரசின் மீது நிலவும் அதிருப்தியாலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் தனக்கு இம்முறை முழுமையாக கிடைக்கும் என அவர் நம்புகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியை மையப்படுத்தி தனது களப்பணியை மேற்கொண்டு, மயூரா ஜெயக்குமார் மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளார். ‘ இத்தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வெற்றி பெற்றால், சினிமாவுக்கு நடிக்கப் போய் விடுவார், மறுபுறம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றாலும் டெல்லிக்குச் சென்று விடுவார். எனவே, இம்மண்ணின் மைந்தனான எனக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்,’ என காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் மேற்கொள்ளும் பிரச்சாரம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.​

திமுக, காங்கிரஸ் பலவீனம்

கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கி இத்தொகுதி கைவிட்டுப் போனதால், இம்முறை திமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், காங்கிரசுக்கு மீண்டும் இத்தொகுதி ஒதுக்கப்பட்டது திமுகவினரிடம் சற்று அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் முழுமையாக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஒத்துழைப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. கமல்ஹாசன் பிரிக்கும் வாக்குகளும், காங். வேட்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தும் .

வாக்காளர் விவரம்

கடந்த ஜனவரியில் மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில், இத்தொகுதியில் 1,25,416 ஆண்கள், 1,25,950 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,51,389 வாக்காளர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x