

தமிழகத்தில் கோடைக் காலம் நெருங்கி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடலோரப் பகுதியான சென்னையிலும் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனிடையே, தமிழக தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. கடும் வெப்பத்துக்கு நடுவே வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. கட்சித் தலைவர்கள் பலர், வெயிலுக்கு அஞ்சி காலை நேர பிரச்சாரத்தை தவிர்த்து, மாலை நேரத்தில் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்கும் தொண்டர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, தர்பூசணி, எலுமிச்சை சாறு, ரோஸ் மில்க் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்குவது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் குளிர்பானங்களை வாங்க தொண்டர்கள் மத்தியில் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.